மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்களால் பரபரப்பு
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் ஆட்டத்தின் போது வீரர்களிடையே மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அணிக்கும் சேப்பாக்கம் அணிக்கும் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தது. நத்தத்தில் நடந்த இந்த போட்டியில் சேப்பாக்கம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி நிதானமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் 16ஆவது ஓவரை வீசிய சாய் கிஷோரின் 2வது பந்தில் அஸ்வின் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்தார். இதனால் சாய் அதிருப்தி அடைந்ததை அவர் முக பாவனையே காட்டியது, இந்த நிலையில் 5வது பந்தில் இன்னொரு வீரரான ஜெகதீசன் ஆட்டமிழந்தார். அந்த பவுண்டரி வெறுப்பில் இருந்தாரோ என்னவோ, அவுட்டான ஜெகதீசன் அருகில் சென்ற பந்துவீச்சாளர் சாய் அவரை பார்த்து ஏதோ முணுமுணுக்க பதிலுக்கு அவர் சாய் மார்பில் தன் இரு கைகளையும் வைத்து தள்ளினார். இதனிடையில் அங்கு ஆவேசத்துடன் வந்த அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட அந்த இடமே பரபரப்பானது. பின்னர் சக வீரர்களும், நடுவர்களும் வந்து அவர்களை சமாதானப்படுத்த அந்த மோதல் சம்பவம் முடிவுக்கு வந்தது. இதனிடையில் 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் மட்டுமே எடுத்த திண்டுக்கல் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
.