Type Here to Get Search Results !

ஐபிஎல்: 5 "பெஸ்ட்' இன்னிங்ஸ்







9-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. இந்த சீசனில் அபாரமாக ஆடிய பெங்களூர் அணி 3-ஆவது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் தோற்று ஏமாற்றத்தோடு வெளியேறியது. விராட் கோலியின் அட்டகாசமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. அவர் 16 ஆட்டங்களில் விளையாடி 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து அசத்தினார். ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பல ஆட்டங்களில் தனி ஒருவராக சாதித்தார். அவரால்தான் ஹைதராபாதுக்கு கோப்பை சாத்தியமானது என்றுகூட சொல்லலாம்.  இந்த சீசனின் 5 "பெஸ்ட்' இன்னிங்ûஸ ஆடிய பெருமை பெங்களூர் கேப்டன் விராட் கோலி, ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், கொல்கத்தா கேப்டன் கெளதம் கம்பீர், டெல்லி வீரர் டி காக், பெங்களூர் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஆகியோரையே சேரும்.

 டேவிட் வார்னர்-93* VSகுஜராத்




 இந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்த இரு கேப்டன்களில் வார்னரும் ஒருவர். அவர் இல்லாவிட்டால் ஹைதராபாத் அணியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய ஆட்டம் அமைந்தது.  குஜராத்துக்கு எதிரான 2-ஆவது தகுதிச்சுற்றில் வார்னர் ஆடியவிதம் பிரம்மிக்க வைத்தது. 163 ரன்கள் என்ற இலக்கோடு விளையாடிய ஹைதராபாத் அணியில் ஷிகர் தவன், யுவராஜ் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி தோற்பது உறுதி என எல்லோரும் நினைத்தனர்.  ஆனால் வார்னர் தனியாளாக நின்று வெளுத்து வாங்க, ஆட்டத்தின் போக்கு மாறியது. இறுதியில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஹைதராபாத். அந்த ஆட்டத்தில் வார்னர் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்தார்.  இந்த சீசனில் 17 ஆட்டங்களில் விளையாடிய வார்னர் 9 அரை சதங்களுடன் 848 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் 800 ரன்களுக்கு மேல் குவித்த 2-ஆவது வீரர் என்ற பெருமை அவர் வசமானது. இந்த சீசனில் அவர் விளாசிய 9 அரை சதங்களில் 8 அரை சதங்கள் ஹைதராபாதின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

 டிவில்லியர்ஸ்- 79* VS குஜராத்




 பெங்களூர் அணியில் கோலிக்கு அடுத்தபடியாக ஜொலித்தது தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்தான். குஜராத்துக்கு எதிரான லீக் சுற்றில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ், முதல் தகுதிச்சுற்றில் அதே குஜராத்துக்கு எதிராக மீண்டும் அசத்தினார்.159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணியில் கெயில், கோலி, ராகுல், சச்சின் பேபி உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களோடும், ரன் ஏதுமின்றியும் வெளியேற, 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அபாயகரமான பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தனியாளாக களத்தில் நின்று குஜராத்திடம் இருந்து வெற்றியைப் பறித்தார். அந்த ஆட்டத்தில் அவர் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடிய டிவில்லியர்ஸ் ஒரு சதம், 6 அரை சதங்களுடன் 687 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.

 கெளதம் கம்பீர்-90* VS ஹைதராபாத்




 இந்த சீசனில் தங்கள் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் 3 கேப்டன்கள். அவர்களில் ஒருவர் கெளதம் கம்பீர். கொல்கத்தா அணி, பிளே ஆஃப் சுற்றோடு வெளியேறியபோதும் கம்பீரின் ஆட்டம் அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பலரையும் குரல் கொடுக்க  வைத்துள்ளது.  ஹைதராபாதுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கம்பீர் ஆடிய ஆட்டம் அவருடைய உச்சக்கட்ட ஃபார்மை வெளிப்படுத்தியது. 143 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆடிய கொல்கத்தா அணியில் கம்பீர் ஆரம்பத்தில் எச்சரிக்கையோடு ஆடினார்.  ஆனால் ஒரு கட்டத்தில் உத்தப்பா, ஆன்ட்ரே ரஸல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, நிதானத்தை இழந்த கம்பீர் அதிரடியில் இறங்கினார். அவர் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் சேர்க்க, 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது கொல்கத்தா. இதில் அரை சதமடிக்க 41 பந்துகளை எடுத்துக் கொண்ட கம்பீர், அடுத்த 19 பந்துகளில் 40 ரன்களை விளாசி அசத்தினார். இந்த சீசனில் அவர் 15 ஆட்டங்களில் விளையாடி 5 அரை சதங்களுடன் 501 ரன்கள் குவித்தார்.

 விராட் கோலி -113 VS பஞ்சாப்




 9-ஆவது சீசன் குறித்து விவாதிப்பது என்றால் அதில் கோலியின் பெயரைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் தடுமாறிய பெங்களூர் அணியை தனது அசத்தலான ஆட்டத்தால் முன்னேற்றினார் கோலி.  ஒரு கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், கடைசி 4 லீக் ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயம் பெங்களூருக்கு ஏற்பட்டது.  இந்த நிலையில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது மழை குறுக்கிட, ஆட்டம் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதில் இடது கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது விளையாடிய கோலி 47 பந்துகளில் சதமடித்தார். அவர் 50 பந்துகளில் 113 ரன்கள் சேர்க்க, 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது பெங்களூர். இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த சீசன் முழுவதும் உச்சக்கட்ட ஃபார்மோடு விளையாடிய கோலி  4 சதம், 7 அரை சதம் உள்பட 973 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 900 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

 டி காக்- 108 VS பெங்களூர்




 ஜாகீர்கான் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக். எதிர்முனையில் சரியான தொடக்க வீரர் இல்லாதபோதும் தனியாளாக சில ஆட்டங்களில் அசத்தினார்.  பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மனம் தளராமல் ஆடிய டி காக் 51 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் குவிக்க, 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது டெல்லி. ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த டி காக், இந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி 445 ரன்கள் குவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad