Type Here to Get Search Results !

மீண்டும் வீழ்ந்தது இந்தியா,ரசிகர்கள் ரகளை தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா





கட்டாக்: இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரை தென் ஆப்ரிக்க அணி 2–0 என கைப்பற்றியது. இப்போட்டியில் ஆத்திரமடைந்த கட்டாக் ரசிகர்கள் பாட்டில்களை எறிந்து ரகளையில் ஈடுபட்டது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, 0–1 என, பின் தங்கி இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். மூன்று ‘சுழல்’: இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் நீக்கப்பட்டு, ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டார். அஷ்வின், அக்சர் படேல் சேர்த்து மொத்தம் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றனர். தென் ஆப்ரிக்க அணியில் டி லாங்கேவுக்கு பதிலாக ஆல்பி மார்கல் தேர்வானார். ‘பேட்டிங்’ மோசம்: இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஷிகர் தவான் (11) மோரிஸ் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். அடுத்து வந்தவர்களும் ஏனோதானோ என விளையாடினர். கோஹ்லி (1) வந்த வேகத்தில் ரன் அவுட்டானார். ரோகித் சர்மா 22 ரன்னுக்கு, ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். தோனி ஏமாற்றம்: அம்பதி ராயுடு ‘டக்’ அவுட்டானார். அணியை மீட்க வேண்டிய கேப்டன் தோனி (5), ரெய்னாவும் (22) நீடிக்கவில்லை.  ஹர்பஜனும் ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி 69 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, தத்தளித்தது. சுருண்டது இந்தியா: பின் வந்த அக்சர் படேல் (9), புவனேஷ்வர் குமார் ‘டக்’ அவுட்டாகினர். கடைசியில் அஷ்வின் (11) போல்டாக, இந்திய அணி 17.2 ஓவரில் 92 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்க தரப்பில் ஆல்பி மார்கல் 3, இம்ரான் தாகிர், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஷ்வின் ஆறுதல்: பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, டிவிலியர்ஸ் துவக்கம் கொடுத்தனர். சுழலில் அசத்திய அஷ்வின், முதலில் ஆம்லாவை (2) அவுட்டாக்கினார். அடுத்து டுபிளசியை (16) வெளியேற்றிய இவர், டிவிலியர்சை (19) போல்டாக்கினார். தென் ஆப்ரிக்க அணி 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 64 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நேரத்தில் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள் பாட்டில்களை எறிந்து ரகளையால் ஈடுபட, போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் 2 ஓவர்கள் பவுலிங் செய்த நிலையில், ரசிகர்கள் தொல்லை காரணமாக இரண்டாவது முறையாக ஆட்டம் தடைபட்டது. 45 நிமிடத்துக்குப் பின் ஆட்டம் துவங்கியதும் பெகர்டியன் (11) அவுட்டானார். பின் வந்த மில்லர் ஒரு சிக்சர் அடிக்க வெற்றி உறுதியானது. தென் ஆப்ரிக்க அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி (30), மில்லர் (10) அவுட்டாகாமல் இருந்தனர். மூன்றாவது மற்றும் கடைசி ‘டுவென்டி–20’ போட்டி கோல்கட்டாவில் அக்., 8ல் நடக்கிறது.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad