Type Here to Get Search Results !

'எந்திரன் -2' படத்தை 3டி-யில்தான் படம்பிடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார் ஷங்கர்.






சூப்பர் ஸ்டார் தவிர,  ஸ்டார் வேல்யூ இல்லாத 'கபாலி' யூனிட்டுடன் கைகோர்த்து களம் இறங்கி விட்டார், ரஜினி.  சென்னை, மலேசியா, பாங்காங், தாய்லாந்து, கோவா என்று 'கபாலி' பயணம், காலில் இருந்து கபாலம் நோக்கி கிளம்பி விட்டது. ரஜினியின் அடுத்த டார்க்கெட் 'எந்திரன் - 2'. ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என்று பிரம்மாண்ட கூட்டணி சேருகிறது. உலகளவில் 300 கோடி ரூபாய் செலவில் உருவாகும் அந்தப் படத்தில் ஹீரோ ரஜினி, வில்லன் அர்னால்டு. முதலில் ஷங்கர் 60 நாட்கள் லம்ப்பாக கால்ஷீட் கேட்டு அரித்துக் கொண்டு இருந்தார்; ஆனால் 40 நாட்களுக்கு மேல் தர மாட்டேன் என்று அடம்பிடித்தார் அர்னால்டு. கடைசியில் கலிஃபோர்னியா முன்னாள் கவர்னரை, ஹாலிவுட்டின் வீரன் பலத்தை நம் நாட்டு காந்தி நோட்டு அசால்ட்டாய் கவிழ்த்து விட,  இப்போது அர்னால்டு ஆ(ள்)ல் ரெடி.  'எந்திரன் -2' படத்தை 3டி-யில்தான் படம்பிடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார் ஷங்கர். தமிழ்நாட்டில் மாநகரங்களில் இருக்கும் மால் தியேட்டர்களை மட்டும் குறி வைக்கிறது, சாதாரண குடும்பத்தில் கும்பகோணத்தில் பிறந்து, மங்களாம்பிகாவில் காபி சாப்பிட்டு வளந்த ஷங்கரின் மூளை. ரஜினியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல்,  தன் சொந்தக்காசில், தங்களின் கிராமத்து சுவர்களில் ரஜினியின் புதுப்பட விளம்பரத்தை வரைகின்றானே அவன்தான் ரஜினியின் அசுரபலம். அதுமாதிரி ரசிகர்கள் வசிக்கும் ஊர்களில், ஷங்கர் விரும்பும்  3டி வசதி நிறைந்த தியேட்டர்கள் கிடையாது என்பது கசப்பான உண்மை.ஷங்கர் இயக்கத்தில் உருவான 'சிவாஜி' படத்தை மீண்டும் மிகுந்த பொருட்செலவில் 'சிவாஜி-3டி' படமாக தயாரித்தது ஏவி.எம். நிறுவனம். ரஜினியின் சிறப்புமிக்க 12-12-12 பிறந்தநாள் அன்று,  அவருக்கு பிறந்தநாள் பரிசாக வெளியிட்டது. தனது ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தோடு 'சிவாஜி-3டி' படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினியும் திரையில் தோன்றியும் பேசினார். அந்தப்படம் தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸானது. அப்போது  திரையரங்கத்தில் 3டி வசதி இருந்தது. சாதாரண நடிகர்கள் நடித்த  திரைப்படம் ரிலீஸ் என்றால் 3டி கண்ணாடி வழங்குவது சுலபம். ரஜினி படத்தின்போது கண்ணாடி பெறுவதில் எத்தனை இடத்தில் தள்ளுமுள்ளு நடந்தது. எத்தனை தியேட்டரில் 'சிவாஜி-3டி' தெளிவாக தெரியாமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை ஏ.வி.எம்.சரவணனின் மகன் குகனை கேட்டால், தியேட்டர்கள் வாரியாக தெளிவுபடுத்துவார். அடுத்து வெளிவந்த 'கோச்சடையான்' கதை குவலயத்துக்கே வெளிச்சம்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' முதல்பாகத்தை முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்தபோது பலபேர்,  ''சார்... இந்த படத்தை 3டி படமா மாத்தினா சூப்பரா போகும்'' என்று அடுக்கடுக்காக ஆலோசனைகளை அள்ளி தெளித்தனர்.  எல்லாவற்றையும் மெளனமாக கேட்டுக் கொண்ட ராஜமெளலி, ''நான் எடுக்கும் பிரம்மாண்டத்தை தென்னிந்தியாவின் கடைக்கோடி ரசிகனும், தனது ஒரிஜினல் கண்களால் பார்த்து ரசிக்க வேண்டும், அதனால் 3டி நோ'' என்று மறுத்து விட்டார். இப்போது 'பாகுபலி - 2' பட வேலைகள் நடந்துவரும் வேளையிலும் 3டி போதகர்களை, போதனையை புறந்தள்ளி வருகிறார்.  முன்பே சொன்னதுபோல் இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஷங்கர் 3-டி கண்ணாடி அளித்தாலும், அதை அணிந்து பார்க்கும் வசதி கொண்ட தியேட்டர்கள் அவர்கள் ஊர்களில் இல்லை.  இந்த தொழில்நுட்ப இடைவெளியின் எதார்த்த உண்மையை ஷங்கர் உணர்வாரா? இதனை ரஜினி, ஷங்கருக்கு உணர்த்துவாரா...?




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad