Type Here to Get Search Results !

"சண்டிவீரன்"- விமர்சனம்





                                                        இயக்குநர் சற்குணத்தை தன் களவாணி, வாகைசூட வா பட வரிசையில், தனது தஞ்சாவூர் பக்கம் கிராமத்திற்கு அழைத்து சென்று, சண்டிவீரன் படத்தின் மூலம் வெற்றியை தேடி தந்திருக்கிறது. கதைப்படி, அருகருகே இருக்கும் இரண்டு கிராமங்கள் நெடுங்காடு, வயல்பாடி... ஒரு கிராமத்தில் நல்ல தண்ணீரும், இன்னொரு கிராமத்தில் உப்பு தண்ணீருமே கிடைப்பதால், நல்ல தண்ணீர் கிடைக்கும் கிராமம் வளமாகவும், உப்பு தண்ணீர் கிடைக்கும் கிராமம் பஞ்சம், பட்டினியாகவும் வாழ்கிறது. இதனால் உப்பு தண்ணீர் கிராமம், நல்ல தண்ணீருக்காக பக்கத்து கிராமத்தை நாடியிருக்க வேண்டிய சூழல். ஆனால் உப்பு தண்ணீர் கிராமத்திற்கு நல்ல தண்ணீர் தர தடுக்கின்றனர் வளமான கிராமத்து பெரிய மனிதர்கள் இருவர். அதை தட்டிக்கேட்க களமிறங்கும் ஹீரோ, பக்கத்து கிராமத்திற்கு நல்ல தண்ணீர் கிடைக்க போராடிய தனது அப்பா வழியில், சொந்த கிராமத்து பெரிய மனிதர்களை எதிர்த்து போராடுகிறார். ஹீரோவிற்கு இரண்டு பெரிய மனிதர்களையும் தாண்டி வெற்றி கிட்டியதா.? இரு பெரிய மனிதர்களில் ஒருவரது பெண் வாரிசான ஹீரோயினும், ஹீரோவின் விருப்பப்படியே கிட்டினாரா..? எனும் கதையை பசுமையான கிராமிய சூழலில், ஈரம், வீரம், வம்பு, தும்பு, பாசம், நேசம்... உள்ளிட்ட கிராமிய மனித சிறப்புகள் இம்மியும் பிசகாமல், சண்டிவீரனை வெகு நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

                                                       அதர்வா - பாரி பாத்திரத்தில், கிராமத்து இளைஞராக பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். போலி விசாவுடன் சிங்கப்பூர் சென்று பிரம்படியுடன் திரும்பிய அதர்வாவை உருட்டி, மிரட்டி காதலிக்கும் கயல் ஆனந்திக்கு பயந்து பயந்து, அதர்வா தன் காதலை சொல்லும் இடத்திலும் சரி, காதலில் கட்டுண்டு தன் காதலிக்கு செல்போன் பரிசளித்து, அவரது பெரிய மனிதர் அப்பாவிடம் சிக்கி கொள்ளும் இடத்திலும் சரி... பக்கத்து கிராமத்திற்கு நல்ல தண்ணீர் வேண்டி போராடும் இடங்களிலும் சரி... பக்காவாக பளிச்சிட்டிருக்கிறார் அதர்வா. கயல் ஆனந்தி - கயல் படத்தில் சிறுமியாக தெரிந்தாலும் சண்டிவீரன் படத்தில் அதர்வாவின் குறும்பு காதலியாக, அருமையாக நடித்து  ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர் பெரிய மனிதராகவும், கதாநாயகி ஆனந்தியின் அப்பாவாகவும் வரும் லால், முரட்டுத்தனத்திலும், வில்லத்தனத்திலும் மிளிர்ந்திருக்கிறார். அவரது நண்பராகவும், ஊர் தலைவராகவும் வரும் ரவிச்சந்திரனும் தனது நேர்த்தியான நடிப்பில் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார செய்கிறார். கணவனை இழந்து, நாயகரின் அம்மாவாக வரும் கருத்தம்மா ராஜஸ்ரீ சோகத்தை பிழிந்திருக்கிறார். அதர்வாவின் நண்பராக வரும் இளம்பரிதியும் கிராமத்து மண் மனம் மாறாத நண்பனாக நச் என்று நடித்திருக்கிறார்.

                                                         தஞ்சை மாவட்டத்து கிராமிய எழில் கொஞ்சும் பகுதிகளை பலே சொல்லுமளவிற்கு படம்பிடித்திருக்கும் பி.ஜி.முத்தையாவின் ஔிப்பதிவு, புதியவர் எஸ்.என்.அருணகிரியின் தாலாட்டு இசை, ராஜா முகமதுவின் பக்காவான படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்... இயக்குநர் சற்குணத்தின் எழுத்து - இயக்கத்திற்கு பலம் சேர்த்து, பி ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் இயக்குநர் பாலாவிற்கு வெற்றி மகுடத்தை சூட்டியிருக்கிறான் இந்த சண்டிவீரன். தண்ணீர் பிரச்னைகளுக்கும், அதைஒட்டிய தகராறுகளுக்கும், இனம், மொழி, மதம், மாநிலம் கடந்து சரியான தீர்வு சொல்ல முயன்றிருக்கும் ஒரு காரணத்திற்காகவே சண்டிவீரனை கொண்டாடலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad