Type Here to Get Search Results !

"அச்சாரம் - விமர்சனம்"





                                                அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் காதல் கணவராக அஜானுபாகு உருவத்திலும், உயரத்திலும் வந்த கணேஷ் வெங்கட்ராமன், வில்லானிக், ஹீரோவாக நடித்த சிலந்தி நாயகர் முன்னா ஒரு நாயகராகவும், பூனம் கவுர் நாயகியாகவும் நடித்திருக்கும், கிரைம் த்ரில்லர் பேமிலி சென்டிமெண்ட் படம் தான் அச்சாரம்.

                                                யுகபாரதியின் பொருள் பொதிந்த பாடல் வரிகள், ஸ்ரீகாந்த் தேவாவின் இனிய இசை, ஆர்.கே.பிரதாப்பின் அழகிய ஔிப்பதிவு, சுரேஷ் அர்ஸின் கச்சிதமான படத்தொகுப்பு, மோகன் கிருஷ்ணாவின் வலிமையான புதியபாணி எழுத்து, இயக்கம் உள்ளிட்ட இன்னும் பல சிறப்புகளுடன் வந்திருக்கும் அச்சாரம் திரைப்படம், வேறு ஒருவருடன் நிச்சயம் ஆன பின் ஓடிப்போகத்துடிக்கும் காதல் ஜோடிகளுக்கு பொட்டில் அடித்த மாதிரி புத்தி சொல்ல முயன்றிருக்கும் சரியான ப(பா)டம்!கதைப்படி, தொழில் நிமித்தமாக கொடைக்கானல் மலை பகுதியில் வசிக்கின்றனர் கட்டடகலை நிபுணரான கதாநாயகர் முன்னாவும், அவரது காதலை மனைவி பூனம் கவுரும். வசதியான அவர்களது வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. அதில் பூனம் கவுரும் முன்னாவின் கண்முன்பே காயமடைகிறார்.

                                                புதுமண ஜோடி பதறிப்போய் போலீசில் புகார் அளிக்கிறது. கொள்ளை கேஸை விசாரிக்க வருகிறார் நேர்மைக்கு பெயர்போன சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராமன்.விசாரணைக்கு வந்த இடத்தில் பூனம் கவுரின் கொள்ளை அழகை பார்த்து கணேஷின் புத்தி பேதலிக்கிறது. விரைந்து அந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து கொள்ளை போன நகை, பணத்தை மீட்டு பூனம் கவுரிடம் ஒப்படைக்கும் கணேஷ், அடிக்கடி பூனம் கவுரை சந்திப்பதையும் வழக்கப்படுத்தி கொள்ள, தன் ஆசை மனைவியிடம் அத்துமீற காத்திருக்கும் கணேஷை கண்டிக்கிறார் முன்னா. பூனம் உன் மனைவி அல்ல... என் மனைவி... எனும் கணேஷ் வெங்கட் ராமன் சொல்லும் ப்ளாஷ்பேக்கும், அதனைத்தொடர்ந்து வரும் காட்சிகளும், க்ளைமாக்ஸூம் தான் அச்சாரம் படத்தின் நச் சென்று திருமண மண்டபத்திலிருந்து ஓடிப்போகும் காதலர்களுக்கு புத்தி சொல்லும் மீதிக்கதை! சூர்யாவாக சப்-இன்ஸாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மிரட்டலாக தன் வில்லானிக்-ஹீரோ பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.

                                                 தனக்கு பார்த்து நிச்சயித்த பெண், கல்யாணத்தன்று காதலனுடன் ஓடிப்போன நிலையில், தன் தாயையும் இழந்து அவர் தவிக்கும் தவிப்பு ஈடு செய்ய முடியாதது. அது அவரது பழிவாங்க துடிக்கும் பாத்திரத்திற்கு பக்காவாக வலு சேர்த்திருக்கிறது. பூனத்தின் காதல் கணவராக ஆர்க்கிடெக்ட் சிவா பாத்திரத்தில் முன்னாவும் கச்சிதம்! முந்தைய சிலந்தி, இராவணன் படங்களைக்காட்டிலும் முன்னா இதில் நிறைய நடிப்பில் முன்னேறியுள்ளார். பேஷ், பேஷ்!  ரம்யாவாக வரும் பூனம் கவுர் குடும்ப பாங்கிலும், கிளாமரிலும் ஒரு சேர கவருகிறார். ஞானதேஷ் அம்பேத்கர், ரேகா, ராஜ லட்சுமி, ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்டவர்களும் பளிச் நடிப்பில் பலே சொல்ல வைக்கின்றனர். இசை, படத்தொகுப்பு, பாடல்கள் ஒளிப்பதிவு மாதிரியே உடையலங்காரமும் படத்திற்கு பெரும் பலம்!


                                               மோகன் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில், முன்னா - பூனம் வீட்டிலிருந்து நகையுடன் கட்டுக்கட்டாக பணத்தையும் திருடிச் சென்ற திருடன் உடனடியாக ஒருசில நகைகளை விற்றதாக வரும் வசனத்தவறு உள்ளிட்ட ஒருசில உப்பு சப்பில்லாத குறைகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், அச்சாரம் எல்லோராலும் மெச்ச வேண்டிய படம்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad