Type Here to Get Search Results !

36 வயதினிலெ விமர்சனம்






                                     வசந்தி படிக்கும்போது, மற்ற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தர், திருமணத்துக்குப்பின் கணவர்-மகளால் அலட்சியப்படுத்தப்பட்டு, சராசரி நடுத்தர வர்க்கத்து குடும்ப தலைவியாக சுருங்கிப்போகிறாள். அவளின் கனவுகளும், திறமைகளும் காணாமல் போகின்றன. அவைகளை மீண்டும் அவள் எப்படி மீட்டெடுக் கிறாள்? என்பதே கதை.

கவிதை மாதிரி ஒரு கதை. ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தழுவல் என்றாலும், அதன் வாசனை ஒரு சதவீதம் கூட இல்லாமல், மிக நேர்த்தியான நேரடி தமிழ் படத்தை பார்த்த திருப்தி. கதையிலும், சம்பவங்களிலும், அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலும், அத்தனை ஜீவன் இருக்கிறது.

வசந்தி தமிழ் செல்வனாக மனதில் அழுத்தமாக பதிகிறார், ஜோதிகா. அவருடைய இத்தனை கால இடைவெளி-காத்திருப்புக்கு அர்த்தம் இருந்திருக்கிறது என்று உணர வைக்கிறது, அந்த ‘வசந்தி’ கதாபாத்திரம். நரை விழுந்த தலைமுடிக்கு சாயம் பூசிக்கொள்வதில் ஆரம்பித்து, கணவரின் குத்தலான பேச்சுக்களை சகித்துக் கொள்ளும் மனைவியாக-மகளின் அலட்சியங்களை தாங்கிக் கொள்ளும் தாயாக-ஜனாதிபதி மாளிகையின் சூழ்நிலைகளைப் பார்த்து மிரளும் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார், ஜோதிகா.

பதிமூன்று வயது மகளின் பருவத்தை புரிந்து கொண்டு, ‘‘நீங்க அவளுக்கு நல்ல அப்பாவாக இருக்கலாம். ஆனால், நல்ல அம்மாவாக இருக்க முடியாது’’ என்று கணவரிடம் வாதாடும்போதும், ‘‘இன்னொரு வசந்தியாக என் மகள் இருந்திடக் கூடாதுன்னு என் கணவர் சொல்கிறார். அப்படின்னா இத்தனை காலமும் அந்த வீட்டில் வசந்தி என்னவாக இருந்தாள்?’’ என்று தோழியிடம் குமுறி அழும்போதும்-அனுதாபங்களை அள்ளுகிறார். படத்தின் இறுதி காட்சிகளில், ஜோதிகா ஜோதிகாதான் என்று சொல்ல வைக்கிறார்.

கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், ஜோதிகாவின் சினேகிதியாக அபிராமி, அலுவலக தோழியாக தேவதர்ஷினி, நண்பராக பிரேம், ஜோதிகாவின் கணவராக ரகுமான், மகளாக அமிர்தா, மாமனாராக டெல்லி கணேஷ், போலீஸ் கமிஷனராக நாசர், போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர், ஜவுளிக்கடை அதிபராக ஜெயப்பிரகாஷ், காய்கறி வியாபாரியாக இளவரசு என படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள்.

சென்னை, டெல்லி நகரங்களின் அழகுக்கு அழகு சேர்த்து இருக்கிறது, திவாகரனின் கேமரா. ‘‘வாடீ ராசாத்தி...’’ பாடல், சந்தோஷ் நாராயண் பெயர் சொல்கிறது. 

படத்தின் முதல் பாதியில் கணவர், மனைவி, மகள், மாமனார், அலுவலகம் என்று ஒரு நடுத்தர குடும்ப பெண்ணின் கதையை யதார்த்தமாக சொல்லியிருக்கும் டைரக்டர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மீதி பாதியை சமூக அக்கறையுடனும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, காய்கறிகளுக்கு எப்படி விஷம் ஏற்றப்படுகிறது? என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம், பதற வைக்கிறது. 

படத்தின் முதல் பாதி, மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி, வேகமாக பறக்கிறது. கதையுடன் ஒன்றிய வசன வரிகள், எழுதியவர் (விஜி) யார்? என்று கேட்க தூண்டுகின்றன. இடைவேளைக்குப்பின் வரும் திருப்பங்களும், ஜோதிகாவுக்கு கிடைக்கும் வெற்றிகளும் தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த ஆதரவை பெறும். தியேட்டரில் ஆரவாரத்துடன் கைதட்டுகிறார்கள்.

மொத்ததில் 36 வயதினிலெ குடும்பகள் பார்க்க வேண்டிய படம். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad