Type Here to Get Search Results !

கோப்பை யாருக்கு? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை

கோப்பை யாருக்கு? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை




கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள, எட்டாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன.
நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 47 நாள்களாக நடைபெற்ற இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
2013-இல் ஸ்பாட் ஃபிக்சிங் விவகாரத்தால் விமர்சனத்துக்குள்ளான சென்னை அணி, இந்த முறை வேறு விதமான சிக்கலில் சிக்கியது. அமலாக்கப் பிரிவிடம் சமர்ப்பித்த ஆவணங்களில் சென்னை அணியின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
ஒரு வழியாக களத்துக்கு வெளியே நிலவும் சர்ச்சைகளைப் பொருட்படுத்தாது, களத்தில் தோனி தலைமையிலான சென்னை வீரர்கள் தேவைப்படும் நேரத்தில் தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஆறாவது முறையாக இறுதி ஆட்டத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
முதல் தகுதிச் சுற்றில் மும்பையிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை, ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் பெங்களூருவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
மறுமுனையில் முதல் தகுதிச் சுற்றில் சென்னையை வீழ்த்தி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய உற்சாகத்தில் உள்ளது மும்பை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மே 26-ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இரு அணிகளும் மோதின. இதில் மும்பை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றதால், சென்னை மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பு நழுவியது.
சாதக பாதகங்கள்:
சென்னை தொடக்க வீரர் மெக்கல்லம் தேசிய அணிக்குத் திரும்பிய குறை இல்லாமல் பார்த்துக் கொண்டார் மைக் ஹஸ்ஸி.
பெங்களூருக்கு எதிராக ஹஸ்ஸி அடித்த அந்த 56 ரன்கள் "மிஸ்டர் கிரிக்கெட்' என்ற அவரது அடைமொழிக்கு பொருத்தமானதாக இருந்தது. அந்த ஆட்டத்தில், ஆஷிஸ் நெஹ்ரா வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் முக்கியமானவை என்பதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது தேடி வந்தது.
இதுவரை 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், இறுதி ஆட்டத்திலும் மும்பைக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பது சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மும்பை நிலவரம்: 
இந்தத் தொடரின் முதல் ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்த மும்பை, பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிவிடும் என்று எதிர்பார்த்த வேளையில், கடைசியாக ஆடிய எட்டில் ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்று திகைக்க வைத்தது.
அதிலும் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாதை 113 ரன்களில் சுருட்டி, ஆறு ஓவர்களை மீதம் வைத்து அதை சேஸ் செய்த விதத்தை, இந்த சீசனில் மும்பையின் மைல் கல் எனலாம்.
நான்கு நாள் ஓய்வுக்குப் பின் புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ள மும்பை அணிக்கு லெண்டில் சிம்மன்ஸ், பார்த்தீவ் படேல் நிலையான தொடக்கம் ஏற்படுத்துகின்றனர். அதிலும்சிம்மன்ஸ் இதுவரை 5 அரை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன் டுமினி (2009), சச்சின் (2010) ஆகியோர் மட்டுமே ஒரே சீசனில், மும்பை சார்பில் அதிக அரை சதங்கள் அடித்திருந்தனர்.
மைதான நிலவரம்: மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிகிறது. எனவே, இரு அணிகளும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
சென்னைக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்திய ஹர்பஜனை, மும்பை பெரிதும் நம்பியுள்ளது. சென்னை அணிக்கு அஸ்வின் கை கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
வேகப் பந்துவீச்சாளர்களும் ஜொலித்தாலும் ஆச்சரியமில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மும்பையின் லசித் மலிங்கா வீசிய யார்க்கர் பந்தில் சென்னையின் மைக் ஹஸ்ஸி லெக் ஸ்டம்ப்பை பறிகொடுத்து நின்றது நினைவிருக்கலாம். சென்னை அணி தரப்பில் டுவைன் பிரோவா, நெஹ்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட வாய்ப்புள்ளது.
மைக்கேல் ஹஸ்ஸி, சென்னை தொடக்க வீரர்.


""கடந்த காலங்களில் எப்படி ஆடினோம் என்பது விஷயமல்ல. இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தால், கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகி விடும். அப்படி நடப்பதை விரும்பவில்லை.
இந்தத் தொடரை நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை. இருந்தாலும் எங்களுக்கு வாய்ப்பு இருப்பதையும் நம்பினோம். கடைசியாக ஒரு முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வீரர்கள் இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துவைத்திருப்பர் என நம்புகிறேன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad