செயற்கை மதிநுட்ப மென்பொருள் மூலம் ஓர் இரவில் மாபெரும் கோடீஸ்வரர்

மனிதர்களைப் போன்று கணினிகள் சிந்திப்பதற்கு வழிவகை செய்யக்கூடிய செயற்கை மதிநுட்ப மென்பொருளை விருத்தி செய்வதற்காக தன்னால் உருவாக்கப்பட்ட கம்பனியை கூகுள் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் பிரித்தானியாவைச் சேர்ந்த கணினி மேதையொருவர் ஒரு நாளில் மாபெரும் கோடீஸ்வரராகியுள்ளார்.

நரம்பியல் விஞ்ஞானியான டெமிஸ் ஹஸ்ஸபிஸ், (37 வயது) இரு வருடங்களுக்கு முன் கணினிகள் மனிதர்களைப் போன்று சிந்திப்பதற்கு உதவும் முகமாக டீப்மைன்ட் டெக்னோலொஜிஸ் நிறுவனத்தை பிறிதொருவருடன் இணைந்து ஸ்தாபித்தார்.

லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் அவரது கம்பனி வர்த்தக ரீதியாக எதனையும் உற்பத்தி செய்யாத செயற்கை மதிநுட்பத்துறையில் முன்னோடியாக அது கொண்டுள்ள நிபுணத்துவ ஆற்றலை கவனத்திற் கொண்டு அக் கம்பனியை 242 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் விலைக்கு கூகுள் வாங்கியுள்ளது.

இது கூகுளால் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தனியொரு உள்வாங்கல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இது தொடர்பில் ஹஸ்ஸபிஸ் விபரிக்கையில், ''கூகுளுடன் இணைவது குறித்து நாம் பெரிதும் பரவசம் அடைந்துள்ளோம்'' என்று கூறினார்.

75 ஊழியர்களுடன் செயற்படும் டீப்மைன்ட் டெக்னோலொஜிஸ் கம்பனியை பேஸ்புக் இணையத்தள நிறுவனமும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url