Type Here to Get Search Results !

குமரியில் முதியவருக்கு கொரோனா இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் உறுதியானதாக கலெக்டர்; இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு கலெக்டர் சாந்தா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
குமரியில் முதியவருக்கு கொரோனா இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் உறுதியானதாக கலெக்டர் தகவல்
குமரியில் முதியவருக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன. இதனால் யாரும் வெளியில் இருந்து இந்த பகுதிகளுக்குள் செல்லவும் முடியாது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேறவும் முடியாது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடந்தது.

எதிர்பார்ப்பு

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இன்னும் 6 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். அவர்களும் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் குமரி மக்கள் நிம்மதியுடன் இருந்தனர். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட குமரி மாவட்டம், விரைவில் கொரோனா தொற்று இல்லை என்று உருவாகி பச்சை மண்டலமாக மாறும் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

முதியவருக்கு கொரோனா?

இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் மேல்பாலை அருகில் உள்ள மாங்காலை பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசு தமிழக அரசுக்கு தெரிவித்தது.

உடல்நலக்குறைவுடன் இருந்து வந்த இந்த முதியவர் அடிக்கடி கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்று வருவதால் அங்கு வரும் நோயாளிகள் மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

நோய்த்தொற்று இல்லை

இதனால் மாங்காலையில் உள்ள அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கி பழகியவர்கள் என மொத்தம் 11 பேருக்கு நேற்று முன்தினம் இரவு சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே குமரி மாவட்ட முதியவருக்கு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில அதிகாரிகள், குமரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பரிசோதனை

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மாங்காலையைச் சேர்ந்த முதியவருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் இருந்தும் இதை உறுதிப்படுத்தி விட்டனர்.

மாங்காலை பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் உள்ள குடும்பத்தினர், உறவினர்கள் என நெருங்கி பழகியவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரொனா இல்லை என நமது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால் மாங்காலை பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆக்கவில்லை. எனினும் பரிசோதனை செய்யப்பட்ட 11 பேரையும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

மேலும் இதுதொடர்பாக விஜயதரணி எம்.எல்.ஏ. கூறுகையில், மாங்காலை பகுதியைச் சேர்ந்த முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டரும், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவும் என்னிடம் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை. விளவங்கோடு தொகுதி கொரோனா இல்லாத பச்சை மண்டல பகுதியாகத்தான் உள்ளது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றார்.

இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு கலெக்டர் சாந்தா உத்தரவு
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு என மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கும், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அத்தியூரை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி மற்றும் அத்தியூர், துங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். மேலும் 14 நாட்களுக்கு வெளி நபர்கள் மேற்காணும் பகுதிகளுக்குள் செல்லவும், உள்ளூர் நபர்கள் வெளியில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கூடாது வியாபாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் நேதாஜி சாலை, எம்.ஜி. சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மகாகவி பாரதியார் வீதி, ரெயில் நிலையம், முத்தையா தெரு, சந்தானகோபால் தெரு, கைவல்லியர் தெரு ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? முக கவசம் அணிந்து வருகிறார்களா? என பார்வையிட்டதோடு, முக கவசம் அணியாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு, பொருட்களை வழங்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதிகளான கே.கே.சாலை, கைவல்லியர் தெரு, லட்சுமி நகர் பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா? எனவும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முறையாக செல்கிறதா? என்று நகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்காணித்து பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா? என போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் விதியை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அத்தியாவசிய பொருட் கள் அனைத்தும் வீடு தேடி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒலிபெருக்கி மூலம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு ஏற்பாடு

இதையடுத்து கோலியனூர் கூட்டுசாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை, புதுச்சேரி- கடலூர் மார்க்கத்தில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு வரும் அரசு ஊழியர்கள், மருத்துவ துறையினரின் அடையாள அட்டைகளை சோதனை செய்து நகரத்திற்குள் செல்ல அனுமதிக்கலாம் என்றும் மற்றவர்களை பனையபுரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடும்படியும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் தஞ்சை கலெக்டர் தகவல்
மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

நிவாரண உதவி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் ஊராட்சியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தன்னார்வலர்கள் சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவியாக 1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ரூ.250 மதிப்பிலான அத்தியாவசிய உணவு பொருட்கள் ஆகியவற்றை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார். பின்னர் அவர், சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தஞ்சை பிள்ளையார்பட்டியில் தன்னார்வலர்கள் சார்பில் 2,175 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு மற்றும் கபசுர குடிநீரையும் கலெக்டர் வழங்கினார்.

வெளி மாநில தொழிலாளர்கள்

பின்னர் தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சந்தித்து, அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவுரையின்படி, வெளிமாநில தொழிலாளர்களை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தொடர்ந்து, வல்லம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை பார்வையிட்டு அவர்களின் அத்தியாவசிய தேவைகளை தடையின்றி செய்து தருமாறு வருவாய்த்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அப்போது தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தாசில்தார்கள் வெங்கடேசன், அருள்ராஜ், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 மண்டலங்களில் இன்று கட்டுப்பாடுகள் தளர்வு - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார். ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நாளை (அதாவது இன்று) வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதே நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடுகள் தளர்வு

மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு அமைந்து உள்ள, 10 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இந்த பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 28 நாட்களாக நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் புதிய தொற்று ஏற்படவில்லையெனில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி செய்துங்கநல்லூர் மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. நாளை (அதாவது இன்று) 3 மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. தொடர்ச்சியாக மற்ற மண்டலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

பாதிப்பு இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வார்டு மற்றும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டத்தில் எந்த முதல்நிலை களப்பணியாளர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பருப்பு, அரிசி ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன. மற்ற தொழிற்சாலைகள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன, அதில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை முதல்-அமைச்சர் கேட்டு உள்ளார்.

அதனை அனுப்பி உள்ளோம். அதனை பரிசீலித்து எந்தெந்த நிறுவனங்கள் இயங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும். அதன்பிறகு எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுகாதாரம்

ஊரடங்கு தளர்வு வந்தாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்றவற்றை தவிர்த்து சுகாதாரத்தை பேண வேண்டும். அப்போதுதான் நோய் மீண்டும் பரவாமல் தடுக்க முடியும்.

மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணிக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடுகலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்கு ரூ.16 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நமது மாவட்டத்துக்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 46 பணிகள் மேற்கொள்ள ரூ.16 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் 23 ஆயிரத்து 120 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிகளும் அந்த பகுதி விவசாயிகள் மூலமே மேற்கொள்ள வேண்டும். நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளை சரிசெய்து விட்டு மற்ற பணிகளை தொடங்க வேண்டும்.

விவசாய குழுக்கள்

விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும். முதல்கட்டமாக விவசாய குழுக்களிடம் வங்கி கணக்கு மற்றும் குழு அமைப்பது தொடர்பான அனைத்து பணிகளும் விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கி, அனைவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணீஷ் நாரணவரே (நெல்லை), பிரதீப் தயாள் (சேரன்மாதேவி), உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற வெளியே வர வேண்டாம்: கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
கட்டிகானப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற வெளியே வர வேண்டாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்துள்ளதே தவிர முற்றிலும் அகற்ற இயலவில்லை. இதற்கு சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்காததே காரணம்.

இதிலிருந்து பொதுமக்களை முற்றிலும் பாதுகாக்கும் பொருட்டு, கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டிகானப்பள்ளி கிராம மக்கள் தங்கள் வீட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியே வரவேண்டாம். தங்களுக்கு தேவையான பொருட்களை பெற அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களில் உள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டு, பொருட்களைப் பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தை செலுத்தினால் போதும்.

பொருட்களைப் பெறுவதற்கு தன்னார்வலர்களுக்கு தனியாக பணம் வழங்கத் தேவையில்லை. பொருட்களுக்கு உண்டான பணத்தை மட்டும் வழங்கினால் போதும். மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்குள் இருந்தாலும் அவ்வப்போது சோப்பால் கைகளைக் கழுவ வேண்டும்.எனவே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் பெற தொலைபேசி எண்கள் - மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு, தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க அரசு முன்வந்துள்ளது. இந்த தொலைதூர ஆலோசனை வழங்குவதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜி.கேர் மருத்துவமனை 9566560730, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை 9444991299, ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் 044 45928500, அப்போலோ மருத்துவமனை 044 2829 3333 ஆகிய மருத்துவமனை தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுவது எப்போது? - கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குணம் அடைந்து உள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உடன், கொரோனா தொடர்பு உடையவர்களின் பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 18 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, சுமார் 32 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தீவிர தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுதலை பெற்று இருப்பதாலும், கடந்த 14 நாட்களுக்கும் மேலாக புதிய தொற்று கண்டறியப்படாததாலும் படிப்படியாக தீவிர தனிமைப்படுத்துதலுக்கு உள்படுத்தப்பட்ட பகுதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தேதி வாரியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படும் விவரத்தை கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த பகுதிகள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வந்தன.

இங்கு தீவிர கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் அமலில் இருந்தது. அந்தந்த பகுதிகளில் கடைசியாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்த பகுதிகளில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.இந்த பகுதிகளில் தனிமைப்படுத்துதல் விதி தளர்வு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் சுல்தான் பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, ரெயில்வே காலனி, மரப்பாலம் பகுதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. கவுந்தப்பாடியிலும் தனிமைப்படுத்தும் விதியில் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. கோபி நகராட்சி மற்றும் லக்கம்பட்டி பேரூராட்சி பகுதிகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன. சத்தியமங்கலம் நகராட்சி தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியும் தளர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

அதைத்தொடர்ந்து வருகிற 5-ந்தேதி ஈரோடு மாநகராட்சியில் மீராமொய்தீன் வீதி (வளையக்கார வீதி), மோசிக்கீரனார் வீதி, சாஸ்திரிநகர், கருங்கல்பாளையம், கள்ளுக் கடை மேடு பகுதிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன. பி.பி.அக்ரஹாரம் பகுதி வருகிற 6-ந்தேதி விடுவிக்கப்படுகிறது. நம்பியூர் அழகாபுரி பகுதி 10-ந்தேதியும், கே.என்.பாளையம் பேரூராட்சி மற்றும் பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் ஆகிய பகுதிகள் 13-ந்தேதியும் விடுவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மே 3-ந் தேதி வரையான பொது ஊரடங்கு பொருந்தும். அவர்கள் அந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலம்வரை தனிமைப்படுத்துதலில் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாமல் பாதுகாக்க உதவ வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad