Type Here to Get Search Results !

உடலுக்கு பலம் தரும் பருத்திப்பால்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி பானம் குறித்து பார்க்கலாம்.

ஆடைக்கு பயன்படுவது பருத்தி. இதன் விதைகள் சத்தூட்டமான உணவாக விளங்குகிறது. பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.


உடலுக்கு பலம் கொடுக்கும் பருத்தி விதை பால் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பருத்தி விதை, அரிசி மாவு, தேங்காய் பால், ஏலக்காய் பொடி, வெல்லக்கரைசல். செய்முறை: 6 முதல் 8 மணி நேரம் பருத்தி விதைகளை ஊறவைக்கவும். இதை அரைத்து வடிகட்டி பால் எடுத்து சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது அரிசி மாவு சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் பொடி, வெல்லக்கரைசல் சேர்த்து கலந்து குடித்துவர உடலுக்கு பலம் கொடுக்கும். இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். வயிற்று புண் குணமாகும்.

மாங்காயை பயன்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மாங்காய், நல்லெண்ணெய், பெருங்காயப்பொடி, கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, வரமிளகாய் பொடி, உப்பு, வெல்லக்கரைசல்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயப்பொடி, கடுகு, கறிவேப்பிலை, மாங்காய் துண்டுகள், மஞ்சள் பொடி, வரமிளகாய் பொடி சேர்த்து நீர்விட்டு வேகவைத்து உப்பு சேர்க்கவும். வெல்லகரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறவைத்தபின் சாப்பிட்டுவர பசியை தூண்டும். நீண்டநாள் காய்ச்சல் காரணமாக வாய்கசப்பு உள்ளவர்கள் இதை சாப்பிட கசப்பு மாறும். புளிப்புசுவை உடைய இது வயிற்றில் அமிலங்களை சுரக்க வைக்கும். மாங்காயை அளவோடு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

கொத்துமல்லியை பயன்படுத்தி கண் எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், கொத்துமல்லி, தேன்.
செய்முறை: நெல்லிக்காய், கொத்துமல்லி சாறு தலா 50 மில்லி எடுக்கவும். இதனுடன், 10 மில்லி தேன் சேர்த்து கலந்து குடித்துவர கண் எரிச்சல் சரியாகும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். ரத்த அழுத்தத்தை குறைத்து சமன்படுத்துகிறது. இதய ஓட்டம் சீராகிறது.
சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்வதால் மாரடைப்பு, கைகால் வலி போன்ற பிரச்னைகள் சரியாகிறது. மனம், சுவைக்காக உணவில் சேர்க்கப்படுகிறது. கொத்துமல்லி சாறை மேல்பற்றாக போடும்போது உடல் எரிச்சல் குணமாகும். கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்வதால் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னையால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. கால் வலி ஏற்படும். அடிபட்டால் அதிகமாக ரத்தம் வெளியேறும். அன்னாசி சாறுடன் சீரகப்பொடி சேர்த்து கலந்து குடித்துவர நரம்பு முடிச்சு விரைவில் குணமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad