கொரோனா தொற்றுள்ள தாய், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் கொரோனா பரவுமா ??!!!!



கொரோனா என்னும் கோவிட் 19 பெருந்தொற்று வயது பாராமல் பெருமளவு மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதில் நிறைமாத கர்ப்பிணிகளும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் கூட தொற்று பரவியுள்ளது.

கொரோனா குறித்த அச்சத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கே தயங்கிவரும் நிலையில் இத்தொற்று கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களையும் தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் தாய்ப்பால் மட்டுமெ உணவாக இருக்கும் நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

கொரோனா அறிகுறிகளுடன் தாய்மார்கள்:



கர்ப்பிணிக்கு கொரோனா இருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு கொரோனா அறிகுறி பெரும்பாலும் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சியானது. இந்நிலையில் கொரோனா பாதித்த பெண்கள் பிறந்த பச்சிளங்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லாமல் பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பை சந்திக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு அறிகுறிகளை கொண்டிருக்கும் தாய், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதே போன்று தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் நேராது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

​தாய்ப்பால் தான் எதிர்ப்பு சக்தி:



பிறந்த குழந்தைக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அந்த எதிர்ப்புசக்தியை தருவது தாய்ப்பால் தான். பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். தாய்ப்பாலில் இருந்துதான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

கொரோனா தொற்று தாய்க்கு இருந்தால் சில குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் ஒவ்வொரு முறையும் சிரமம் பார்க்காமல் செய்ய வேண்டும்.

​ஆய்வுகள் கூறுவது என்ன:

கொரோனா தொற்று பாதித்த பெண் தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரோனா பரவியதற்கான ஆதாரம் இல்லை என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டயான் லின் தெரிவித்திருக்கிறார்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை தாயிடமிருந்து உடல் நோய் எதிர்ப்புசக்தியை பலப்படும் ஆண்டிபாடிகளை பெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.கொரோனா அறிகுறிகள் இருக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது கண்டிப்பாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மகராஷ்டிராவில் இயங்கி வரும் இந்திய தாய்ப்பால் ஊக்குவிப்பு தொடர்பு நிறுவனம் BPNI (Breastfeeding Promotion Network of India) கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளை முன்வைத்து விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறது.

​விழிப்புணர்வு அவசியம்:

முதலில் தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என்பதை இளந்தாய்மார்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இதனால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை சீராக இருக்கிறது. தாயின் மன அழுத்தம் தாய்ப்பால் கொடுப்பதால் விரைவாக சீராகிறது.

கொரோனா அறிகுறி உறுதிபடுத்தப்பட்டால் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைக்கு தொற்றுபரவாமல் இருக்க அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து தெரிந்துகொள்வோம்.

​தாய்ப்பால் கொடுக்கும் போது:

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதும், இருமும் போதும், பேசும் போதும், காற்றின் வழியாகவும் பரவக்கூடும். பாதிக்கப்பட்டவரின் சருமத்தின் மேற்பரப்பில் ஒட்டியிருக்க கூடும். இவை குழந்தையின் வாய், மூக்கு, கண் உறுப்பில் தொற்றும் போது குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

குழந்தையை தூக்குவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும். முகத்துக்கு மாஸ்க் அணிவது அவசியம். . மாஸ்க் மூக்கு, வாய் பகுதியை நன்றாக மூடி இருக்கும்படி அணிய வேண்டும்.

கைகளில் கிருமி நீக்கும் சானிடைசரை அடிக்கடி கைகளில் தடவி கொள்ள வேண்டும். குழந்தை இருக்கும் இடம் மற்றூம் உங்களை சுத்தி இருக்கும் இடங்களை கிருமி நாசினி கொண்டு எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

​தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை:



இலேசான அறிகுறிகளோடு இருக்கும் போது தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் தாய்க்கு அறிகுறிகள் அதிகமாக இருக்கும் போது அவர் உடல் ஒத்துழைக்காத போது தாய்ப்பால் எடுத்து குழந்தைக்கு சங்கு வழியாக கொடுக்கலாம்.

தாய்ப்பாலை தானமாக பெற்று குழந்தைக்கு கொடுக்கலாம். பாதுகாப்பான முறையில் மற்றொருவரின் உதவியோடு குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டலாம்.தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் குறித்த விழிப்புணர்வை தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டும். கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் பிரசவிக்கும் போதே இளந்தாய்மார்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

கொரோனாவால் குணமடைந்தாலும் குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்த வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிரமம் பார்க்காமல் இந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

இறுதியாக ஒன்று பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளை எளிதில் நோய்தாக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை எளிதில் நோய் தாக்காது அதோடு கொரோனா தொற்று இருக்கும் இந்த நேரத்தில் தாய்ப்பால் நிச்சயம் பாதுகாப்பு கவசமாகவே இருக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url