Type Here to Get Search Results !

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை; காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ந்தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன்(வயது 54), ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் கடந்த 8-ந்தேதியும், கொல்லிருப்பை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம்(26) நேற்று முன்தினமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே இறந்த சண்முகத்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள், கிராம மக்கள், பா.ம.க.வினர் என்.எல்.சி.2-ம் அனல்மின் நிலையம் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., தொ.மு.ச., பா.ம.க., பாட்டாளி தொழிற்சங்கத்தினர் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இழப்பீடாக ரூ.15 லட்சம் தருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை.

சுமூக முடிவு

இந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு. தொமு.ச. நிர்வாகிகள், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள், பா.ம.க. மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. அதாவது இறந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகத்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சமும், நிபந்தனை ஏதுமின்றி குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்குவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினரும், குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலி
ராணிப்பேட்டையை அடுத்த காரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 35), இவரது மனைவி தேன்மொழி (30). இவர் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு டினுயா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தேன்மொழி வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக உறவினர் விஷாலுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதனால் விஷால் மோட்டார்சைக்கிளை நிறுத்தியபோது நிலைதடுமாறி இருவரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தேன்மொழி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து டீ கடை எரிந்து நாசம்; கணவன்-மனைவி உயிர் தப்பினர்
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரை சேர்ந்தவர் ஞானஒளி (வயது45). அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே டீ கடை மற்றும் பெட்டி கடை வைத்துள்ளார். நேற்று காலை ஞானஒளி டீ கடையை திறந்து வியாபாரம் செய்தார். மதியம் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் இன்று அதிகாலை டீ கடை திறக்கவேண்டும் என்பதால் டீ கடைக்கு தேவையான பாலை வாங்கிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் டீ கடையில் பாலை காய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது டீ கடையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்- மனைவி இருவரும் கடையிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். அதற்குள் டீ கடை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது.

சிலிண்டர் வெடித்து பறந்ததில் அருகே உள்ள புளிய மரமும் தீ பிடித்து எரிந்தது. மேலும் அருகில் உள்ள துணி கடையின் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை உடனடியாக துண்டித்தனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஜோலார்பேட்டை போலீசார் அக்கம் பக்கத்திலிருந்த தீயணைப்பான் மூலமும், தண்ணீர் மூலமும் தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்களும் விரைந்துவந்து டீ கடை மற்றும் புளிய மரத்தின் மீது தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலிறிந்ததும் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஞானஒளியிடம் விசாரணை நடத்தினர்.

இரவு நேரத்தில் திடீரென சிலிண்டர் வெடித்து டீ கடை முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad