Type Here to Get Search Results !

மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து; அதிமுக அரசுக்கு ரஜினி அலெர்ட்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து
அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார்.

உலகில் மிகப்பெரிய உறவு என்றால் அது அம்மாதான். எந்தவித சுயநலமும் இன்றி தன் பிள்ளைகளுக்காகவே வாழுகின்ற ஒரே ஜீவன் அம்மா மட்டுமே! அத்தகைய அம்மாவின் மேன்மையை போற்றும் வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதுதான் அன்னையர் தினம்.

கொரோனா அச்சம் காரணமாக, கோலாகலமான கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் அன்னையர் தினத்தை உலகமெங்கிலும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களது அன்னையர் தின வாழ்த்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு!- எல்லாம் சேர்ந்தவள் அன்னை! அவர்களால்தான் உலகம் இயங்குகிறது.

இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது! என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது! என பதிவிட்டிருக்கிறார்.

அதிமுக அரசுக்கு ரஜினி அலெர்ட்
அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்குகளில், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளது.

இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனை இல்லாததால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உடனடியாக ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது சாத்தியமில்லை என்றும், அதற்கான சட்டவிதிகளும் தமிழகத்தில் இல்லை என்பதால் ஆன்லைன் விற்பனை தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கபடுவதற்கு முன், தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டும் எனக் கோரி, பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மகாலட்சுமி மற்றும் மகளிர் ஆணையம் அமைப்பின் லட்சுமி மணியரசன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்றும் கஜானாவை நிரப்ப நல்வழிகளை பாருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad