Type Here to Get Search Results !

கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்? பல்லாவரம் நகராட்சியில் அரசு டாக்டருக்கு கொரோனா பாதிப்பு


தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்? - மதுரை சுகாதார அதிகாரி 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்லாவரம் நகராட்சியில் அரசு டாக்டருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை தேன்மொழி நகர் பகுதியில் 32 வயதான டாக்டர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கே.கே. நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இவருடைய மனைவியும் டாக்டர். இந்தநிலையில் அரசு டாக்டருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் பல்லாவரம் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து அந்த பகுதியில் இருந்த ரேஷன் கடையையும் மூடினர். இந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்லாவரம் நகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர கோவிலம்பாக்கத்தில் கார் டிரைவர் ஒருவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த சில நாட்களாக வடசென்னைக்கு சென்று வந்த அவர், ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 ஆனது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad