Type Here to Get Search Results !

டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு : மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் குடிமகன்களுக்கு டோக்கன்; 4 ஆம் கட்ட ஊரடங்கு: பஸ், ரயில், விமான போக்குவரத்து இயங்கும்?

டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு : மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் குடிமகன்களுக்கு டோக்கன்
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க ஞாயிறு முதல் சனி வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்,  டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான வழிவகைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது மதுக்கடைக்கு ஒவ்வொரு நாளும் வருவோருக்கு, ஒவ்வொரு கலரில் வண்ண  அட்டையை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முன்வந்துள்ளது.மதுகுடிப்போருக்கு 7 நாளில் 7 வண்ண அட்டை கொடுத்து மதுவை விற்பனை செய்ய டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்து மதுவை வாங்கிச் செல்லலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலரில் டோக்கன் தயாரித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே மதுபானம் வாங்க மதுக்கடைக்கு வர முடியும். குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட கிழமைகளில் கொண்டு வந்து டாஸ்மாக்கில் மது வாங்கலாம்.மேலும் சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

4 ஆம் கட்ட ஊரடங்கு: பஸ், ரயில், விமான போக்குவரத்து இயங்கும்?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3 முறை இதுவரை கொரோனா காரணமாக ஊரட்ங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதோடு, குறைந்த அளவிலான உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கும் எனவும், அதே சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பாக டெல்லி மெட்ரோ சேவையை துவங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை வழிமுறைகளை வகுத்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலமாக நிர்ணயிக்கும் வழிமுறைகளில் மாற்றமிருக்காது என்றும், அதே சமயம் குறைந்தபட்ச அளவிலான தடைகளே நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்படும். சிவப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமல்லாத பிற பொருட்களையும் டெலிவரி செய்ய இ-வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஊரடங்கில் இந்தியாவில் பெரிய அளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்படும். பெரும்பாலான மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் விமான சேவை முக்கியமான நகரங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும். உள்ளூர் விமான சேவை மட்டும் தொடங்கும். வெளிநாட்டு விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படும். இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

பொது ரயில் சேவைகளை தொடங்காமல் மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை மட்டும் தொடர்ந்து வழங்கும்.

கேப்கள், ஆட்டோக்கள் இயங்கவும் நாடு முழுக்க அனுமதி வழங்கப்படும்

அதே சமயம் தியேட்டர்கள், மால்களும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கோவில்கள், வழிபாட்டு தளங்கள் செயல்பட வாய்ப்புள்ளது.

 மக்கள் வெளியே செல்லும் நேரத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று கூறுகிறார்கள். மே 16ம் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்த முடிவு
தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஆம்னி பேருந்து பயண கட்டண தொகையை ஊரடங்கு முடிந்த பின்னர் இரு மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு கி.மீட்டருக்கு ரூ.1.60 என கட்டணம் இருந்த நிலையில், ரூ.3.20 ஆக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க ஆயத்த பணிகள் தீவிரம்
கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் வருகிற 18-ந்தேதி முதல் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க ஆயத்த பணிகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

கிருமி நாசினி தெளிப்பு

அதாவது பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், ஒரு பஸ்சில் 26 பேர் மட்டுமே செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இது பற்றி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வருகிற 18-ந்தேதி அரசு பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடலூர் பணிமனையில் இருந்து பஸ் புறப்படும் போது, கிருமி நாசினி தெளிக்கப்படும். அதேபோல் பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு பயணிகள் ஏறுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம்.

முக கவசம்

அவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்வார்கள். அதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலுக்கு பஸ்கள் சென்று பயணிகளை இறக்கி விட்டதும், நகராட்சி, பேரூராட்சி சார்பில் மீண்டும் பஸ்சில் கிருமி நாசினி தெளித்து, பயணிகளை ஏற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்குவோம். 26 பேர் மட்டும் செல்லும் வகையில் வரிசை எண்களை பஸ்சில் ஒட்டி வருகிறோம்.

மேலும் பஸ்களில் உள்ள சிறு, சிறு பழுதுகளையும் சரிசெய்து வருகிறோம் என்றார்.

மராட்டியத்தில் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரின் உடலை குளக்கரையில் எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பாதி எரிந்த நிலையில் வேறு இடத்திற்கு மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரம், சாமியார்பட்டி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளக்கரையில் நேற்று அதிகாலை புகை மூட்டமாக காணப்பட்டது. உடனே பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். குளக்கரையில் வைத்து பிணத்தை 2 பேர் எரித்து கொண்டிருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரிப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது.

இதுகுறித்து அம்பாத்துரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை எரித்தவர்கள் தொப்பம்பட்டி ஊராட்சியில் பிணம் எரிக்கும் பணியாளர்கள் என்றும், இறந்தவர் ராமசாமி மகன் மாரிமுத்து (வயது 43) என்றும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை சம்பந்தமாக மராட்டிய மாநிலம் புனேக்கு சென்றவர், அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவருடைய உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து, குளக்கரையில் வைத்து எரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குளப்பகுதியில் உடலை எரிக்கக் கூடாது. வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாதி எரிந்த நிலையில் இருந்த அவருடைய உடலை உறவினர்கள் எடுத்துச் சென்று தங்களது சொந்த இடத்தில் வைத்து தகனம் செய்தனர். குளத்தில் பிணம் எரித்த இடத்தை ஊராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்து, பிளச்சிங் பவுடர் தெளித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad