Type Here to Get Search Results !

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை; சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை - வங்க தேச டாக்டர்கள் 
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பரிதவித்து வருகின்றன.உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய கடந்த 6 மாதமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் இன்றளவும் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பு மருந்தினை கண்டறியவில்லை. சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறி வருகின்றன. இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற டாக்டரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது.

தரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு மெக்டின் மற்றும் டாக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் சோதித்துள்ளனர்.

60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் 4 ஆம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.அவர்களுக்கு முதல் 3 நாட்களில் சுவாச பிரச்சினை சீரடைந்தும், 4 ஆம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன.மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - புதிதாக 16 பேருக்கு பாதிப்பு
உலக நாடுகளை ஒருசேர அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், முதன் முதலாகக் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. சீனா எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளால், அந்த நாட்டில் கொரோனா வைரஸ் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. 

முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவிய உகான் நகரில், கொரோனா பாதிப்பு அறவே இல்லை என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,  கட்டுப்பாடுகள்  விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இயல்பு வாழ்க்கைக்கு சீனா வேகமாக திரும்பிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், கொரோனா வைரஸ் மீண்டும் சீனாவை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.  குறிப்பாக சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் கொரோனா படிப்படியாக தலைகாட்டத் தொடங்கியுள்ளது. சீனாவில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. இதில், 15 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

நேற்றைய நிலவரப்படி ஜிலின் மாகாணத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 133- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 106 பேர் மீண்ட நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சீனாவில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 368- ஆக உள்ளது. கொரோனா முதன் முதலில் பரவிய உகான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது. ஹுபெய் மாகாணம்  சுமார் 11 கோடி மக்கள் தொகையைக் கொண்டதாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad