Type Here to Get Search Results !

மே.31 வரை ஊரடங்கு தளர்வு - தமிழகத்தில் போக்குவரத்து தொடர்பாக அரசின் அறிவிப்புகள் என்னென்ன? சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம் - மாநகரப் போக்குவரத்துக் கழகம்

மே.31 வரை ஊரடங்கு தளர்வு - தமிழகத்தில் போக்குவரத்து தொடர்பாக அரசின் அறிவிப்புகள் என்னென்ன?
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பு குறைந்த 25 மாவட்டங்களில் மட்டும் சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவின் பரிந்துரை மற்றும் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் அடிப்படையில், வரும் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே.31 வரை ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளுக்கான தடை நீடிக்கும்.

அதாவது, பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது.

வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி, கூடங்கள், சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவையும் இயங்காது.

இதேபோல், விமானம், ரயில், பேருந்து சேவைக்கும் அனுமதி கிடையாது. மத்திய, மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப்போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி. அதேபோல, இன்று முதல் அரசு அலுவலகங்கள் பாதி பணியாளர்கள் உடன் இயங்கும் என்பதால், அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, ஆட்டோ, டாக்ஸி, ரிக்ஷா, மெட்ரோ ரயில், மின்சார ரயில், தங்கும் விடுதிகள், ரிசாட்ர்டுகள் போன்றவையும் இயங்காது. மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் இ-பாஸ் பெற்று, டாக்ஸி, ஆட்டோக்களை பயன்படுத்தலாம்.இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் ஏதுமின்றி இந்த கட்டுப்பாடுகள் தொடரும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கொரோனா பாதிப்பு குறைந்த 25 மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, கோவை, சேலம், ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நாகை, வேலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, TN e-pass இல்லாமல் இந்த மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படும். நோய்தடுப்பு பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல TN e-pass பெற வேண்டியது அவசியம்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 பேரும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் இருவர் மட்டுமே பயணிக்கலாம்.

இந்த 25 மாவட்டங்களில் வேளாண், வியாபாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு, இ-பாஸ் இல்லாமல், வாடகை வாகனங்கள் மற்றும் டாக்ஸிகளை பயன்படுத்தலாம். மற்றபடி, தேவையின்றி வீட்டைவிட்டு மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் 100 சதவீத பணியாளர்களை ஈடுபடுத்தலாம். 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் இனி 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 100 நபர்களுக்கு அதிகமாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். இவை, சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருந்தும்.

தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள், குறைந்தபட்ச பணியாளர்களுடன் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டும், தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம் - மாநகரப் போக்குவரத்துக் கழகம்
அத்தியாவசியப் பணிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் மக்கள் நடமாட்டமும், சாலைகளில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

4ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் சூழலில், மாநில அரசின் வழிகாட்டுதல்படி தொழில்நிறுவனங்கள் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. அலுவலக வாகனங்கள், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஊழியர்களை அழைத்துச் செல்கின்றன.

இதனால் அண்ணா சாலை, கிண்டி, ராஜிவ் காந்தி சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில், அத்தியாவசியம் மற்றும் அவசரப் பணிகளுக்காக ஏற்கனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இன்று முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்கள் உடன் இயக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயங்கும் இடங்கள்
பேருந்துகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad