Type Here to Get Search Results !

பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா; மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கொக்குப்பாளையத்தை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கு பிரச்சினை தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் ஜிப்மரில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மகன்-மருமகளுக்கும் உறுதி

இதற்கிடையே சமீபத்தில் அவர் சென்னை சென்று வந்தது தெரியவந்தது. இதற்கிடையே அவருடைய மகன், மருமகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேருடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்டறியப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த 150 பேர் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியிலும், ராமநத்தம், வேப்பூர் பகுதியை சேர்ந்த 20 பேர் அப்பகுதியில் உள்ள கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வந்தவர்: கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா
சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ஆம்புலன்ஸ் உதவியாளர்

கரூர் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 42 பேரும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியதையடுத்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாறியது.

இந்தநிலையில், கரூர் அருகே உள்ள கடம்பங்குறிச்சி பகுதிக்குட்பட்ட சின்னவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், சென்னை ராயபுரம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 25-ந்தேதி உறவினர் ஒருவர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் கரூர் வந்துள்ளார். துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரால், ஊரடங்கு காரணமாக மீண்டும் சென்னைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அலுவலகத்தின் உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் 108 ஆம்புலன்சில் கடந்த 27-ந்தேதி காலை முதல் 28-ந்தேதி காலை வரை பணி செய்துள்ளார்.

தனிவார்டில் அனுமதி

இதற்கிடையே சென்னையில் இவருடன், பணிபுரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், கரூரில் இருந்த ஆம்புலன்சு உதவியாளருக்கும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் உதவியாளரின் பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சின்னவரப்பாளையத்தில் ஆம்புலன்ஸ் உதவியாளர் வசித்து வந்த தெரு சீல் வைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் உதவியாளர் பணியின்போது, காணியாளம்பட்டி, கோடங்கிபட்டி, சுங்ககேட், டி.கூடலூர் பகுதிகளில் இருந்து நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களையும் கண்டறிந்து, பரிசோதனை செய்து தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேருமே பெண்கள்.

ஒருவர் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி. இவருக்கு கடந்த 29-ந்தேதி சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

மற்றொருவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 64 வயது மூதாட்டி. இவருக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அடுத்ததாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 24 வயது பெண் டாக்டருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் கேரளாவை சேர்ந்தவர்.

எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு ஒரு வருட மேல் படிப்பையும் முடித்துவிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள கொரோனா நோயாளிகளிடமிருந்து இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய 2 நர்சுகள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது டாக்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த 2 பேர் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர். மற்றொருவர் மேலூர் பகுதியை சேர்ந்தவர். இதன் மூலம் மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad