Type Here to Get Search Results !

மதுரையில் கூடுதலாக திறக்கப்படும் கடைகள்; திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

மதுரையில் கூடுதலாக திறக்கப்படும் கடைகள் - கலெக்டர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி இன்று (திங்கட்கிழமை) முதல் குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படலாம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

கீழ்க்கண்ட பிற தனிக்கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி டீக்கடைகள் (பார்சல் மட்டும்), பேக்கரிகள் (பார்சல் மட்டும்), உணவகங்கள் (பார்சல் மட்டும்), பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்டு, ஹார்டுவேர், சானிடரிவேர் கடைகள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், செல்போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மோட்டார் எந்திரங்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள் மற்றும் சிறிய ஜவுளிக் கடைகள் (ஊரக பகுதிகளில் மட்டும்).

மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டி.வி விற்பனை மற்றும் டி.வி பழுதுநீக்கும் கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகங்கள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், 2 சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சிமருந்து விற்பனை கடைகள், டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிகல் கடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகள் திறக்கலாம்.

இந்த கடைகளை தவிர்த்து மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் விவரம் பின்வருமாறு:-

நோட்டுப்புத்தக உற்பத்தி நிறுவனம், போர்வெல் எந்திர செயல்பாடு, பேப்பர் மொத்த வணிகம், பாத்திரக்கடை, புத்தகக்கடை, போட்டோ ஸ்டூடியோ, எழுது பொருள் விற்பனைக்கடை ஆகியவை திறக்கலாம்.

தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி போதுமான கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும். கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தால் அதனை இயக்க அனுமதி இல்லை. முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் ஆகியவை திறக்கக்கூடாது.

ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு
வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வருபவர்கள் ஆண்டிப்பட்டி வழியாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வருபவர்கள் தேவதானப்பட்டி காட்ரோடு சோதனை சாவடி வழியாகவும் தான் வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து இந்த இரண்டு இடங்களுக்கு வரும் நபர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை முடிவு வரும் வரையில் அவர்கள் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு திரும்பி வருபவர்களுக்கு ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தனிமைப்படுத்தும் முகாமில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த முகாமில் மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டத்துக்கு பல்வேறு பணிகளுக்காக சென்றுவிட்டு திரும்பியவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி பேசிய கலெக்டர், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார். மேலும் குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கும்படியும் கூறினார். பின்னர் அவர்களிடம், “பரிசோதனை முடிவு வரும் வரை இங்கு தங்கி இருக்க வேண்டும். பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்த பின்னர் நீங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள்.

அவ்வாறு வீடுகளுக்கு சென்றாலும் 28 நாட்களுக்கு உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முன்னதாக ஆண்டிப்பட்டி சோதனை சாவடியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கொடைக்கானல் செல்லும் வெளி மாநில நபர்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஊரடங்கு நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண்ணுக்கு இலவச மருந்துக்கு கலெக்டர் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு
ஊரடங்கு நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண்ணுக்கு கலெக்டர் முயற்சியால் இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு தாக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு தவிர பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. வெளியூர் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அத்தியாவசிய தேவைக்காக யாராவது செல்ல வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்து யாருக்காவது அத்தியாவசிய பொருட்களான மருந்து உள்ளிட்டவை வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள், மருந்து நிறுவனங்கள் மூலம் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

புற்றுநோயால் பெண் பாதிப்பு

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சேகர் காலனியில் வசித்து வருபவர் சிவாஜி. மீன் வியாபாரியான இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, கடந்த சில ஆண்டுகளாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். டாக்டரின் ஆலோசனையின் பேரில் அவர் மருந்து சாப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மருந்து தீர்ந்து விட்டதால், கிருஷ்ணவேணி தஞ்சையில் உள்ள பல்வேறு மருந்து கடைகளில் தனக்கு தேவையான மருந்தை கேட்டுப்பார்த்தார். எந்த மருந்து கடையிலும் அவர் கேட்ட மருந்து கிடைக்கவில்லை.

இதையடுத்து செய்வதறியாக திகைத்த அவர், தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முகமது கமாலுக்கு தகவல் தெரிவித்து கிருஷ்ணவேணிக்கு தேவையான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

24 மணி நேரத்தில் ஏற்பாடு

உடனடியாக அவர் தஞ்சை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மருந்து வணிகர்கள் வெற்றிவேல், பாலாஜி ஆகியோர் கிருஷ்ணவேணிக்கு ே-வையான மருந்து தஞ்சை மாவட்டத்தில் எங்கும் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் இருந்து பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். ரூ.18 ஆயிரம் மதிப்பிலான அந்த மருந்து வரவழைக்கப்பட்டு நேற்று கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அவருக்கு கையுறை, முககவசம், சானிடைசர் போன்றவற்றையும் மருந்து வணிகர்கள் வழங்கினர். அவற்றை கண்ணீர் மல்க பெற்றுக்கொண்ட கிருஷ்ணவேணி-சிவாஜி தம்பதியினர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மருந்து வணிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மருந்து வணிகர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்புக்குள்ளான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து சில குறிப்பிட்ட வியாபார கடைகளுக்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேரக் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பிற கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் டீ கடைகளில் பார்சல் சேவை மட்டும் முதல்கட்டமாக சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கிருமி நாசினியை தினமும் 5 முறை தெளித்து சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ டீ குடிக்க அனுமதி இல்லை. இந்த முறையை கடைபிடிக்க தவறும் டீ கடைகள் உடனடியாக மூடப்படும்.

பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்படும். அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தமிழக அரசு அறிவுறுத்திய வழிமுறைகளை கடைபிடித்து பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி மோட்டார் சைக்கிள், மொபட், ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது ஆங்காங்கே போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் ரெங்கர் சன்னதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மெகராஜ் திடீரென பிரதான சாலையில் தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் நபர்களை இறக்கிவிட்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad