Type Here to Get Search Results !

அலுவலகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு; ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?: பிரதமர் மோடி

அலுவலகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு பற்றிய பாதுகாப்பு  வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை,அலுவலகங்களில் கிருமிநாசினி தெளித்துவிட்டு வழக்கமான பணிகளைத் தொடரலாம் போன்ற வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
   
கட்டாயமான விதிகள்

*முடிந்த அளவு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
   
*அனைத்து நிறுவனங்களிலும் தெர்மல் சோதனை கருவிகள் இருக்க வேண்டும்.
   
*எல்லா அலுவலகத்திலும் கிருமி நாசினிகளை வைக்க வேண்டும்.
   
*அதேபோல் குறைந்த அளவில் பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாளர்களை பணிக்கு அழைக்கலாம்.
   
*உணவு இடைவேளை ஒரே நேரத்தில் இருக்க கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றாக கூட கூடாது.
   
*பணியாளர்கள் 40-60 நிமிடத்திற்கு ஒருமுறை கை கழுவ வேண்டும்.
   
*எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தனிப்பட்ட வகையில் பணியாளர்களின் உடல் நிலையை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

அலுவலகங்களுக்கான தடுப்பு வழிகள்

*கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்
   
*காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பிரச்னை இருந்தால் பணிக்கு வரக்கூடாது.

*கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

*வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
   
*சுவாசக் கோளாறு இருக்க கூடிய அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
   
*காய்ச்சல் உள்ளவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய வேண்டும். கொரோனா உறுதியானால் உடனே அலுவலகத்திடம் அறிவிக்க வேண்டும்

*அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை தான் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது

*அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும்.

*அவருக்கு மாஸ்க் கொடுத்து தனியறையில் வைக்க வேண்டும். மருத்துவருக்கு போன் செய்து அலுவலகம் வர வைக்கலாம்.

*சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். 1075 என்ற மத்திய அரசின் இலவச உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்பின் அவரின் உடல்நிலையை பொறுத்து முடிவு எடுக்கலாம்

அலுவலகத்தை மூடுதல்

*அலுவலகத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டால் மொத்தமாக அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை.

*அலுவலகம் முழுக்க கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். ஆனால் அலுவலகத்தில் நிறைய பேருக்கு கொரோனா ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்தை மூட வேண்டும்.

*கொரோனா ஏற்படாத மற்ற நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

கொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்தார். கடைசியாக, 5வது கட்டமாக கடந்த 17-ம் தேதி பிற்பகல் 11 மணிக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில், பாதுகாப்பு, மின்சாரம், இஸ்ரோ, அணுசக்தி, நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துக்கான பொது செலவினங்கள் அதிகரிக்கப்படும். சுகாதார நிறுவனங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சுகாதார மற்றும் நல மையங்களை ஏற்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் மருத்துவமனை வளாகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்கள், வட்டார அளவில் ஒருங்கிணைந்த சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல், ஆய்வுகளை ஊக்குவித்தல் போன்றவை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில், டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளதாகவும், ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றி அமைச்சரவையில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad