Type Here to Get Search Results !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்; கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் - ஐ.நா.சபை தீர்மானம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார் என அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 200-ஐ நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டில் இயங்கிவரும் பிரபலமான அறக்கட்டளையின் தலைவர் பைசல் எடி என்பவர் பிரதமர் இம்ரான்கானை கடந்த வாரம் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்த சில தினங்களுக்கு பிறகு பைசல் எடிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்ரான்கானுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, இம்ரான்கானுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இம்ரான்கான் ஒப்புக்கொண்டதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்வார்” என கூறினார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் - ஐ.நா.சபை தீர்மானம்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கோரி ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்த நோய்கிருமியை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், பெருந்தொற்று நோயான கொரோனாவால் இதற்கு முன் எப்போதும் இல்லாத பாதிப்பு உலக நாடுகளுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

பின்னர், கொரோனா பாதிப்பு நிலவும் இந்த சூழ்நிலையில் வர்த்தக போரை கைவிட கோரியும், தன்னிச்சையான பொருளாதார தடைக்கு எதிராகவும் ரஷியா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பது, புதிய மருத்துவ உபகரணங்களை தயாரிப்பது, மருத்துவ பரிசோதனை, மருந்து பொருட்கள் சப்ளையில் பரஸ்பரம் உதவுவது மற்றும் சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மெக்சிகோவின் சார்பில் வரைவு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

இந்த விஷயத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மசோதாவை ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் திஜானி முகமது பாண்டே 193 உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். ஐ.நா. சபையின் புதிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த தீர்மானம் நிறைவேறாது. ஆனால் எந்த நாடும் எதிர்க்கவில்லை என்றும், இதனால் தீர்மானம் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேறி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா நோய்க்கிருமி மற்ற நாடுகளுக்கு பரவுவதை, ஐ.நா. சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பு தடுக்க தவறிவிட்டதாக சமீபத்தில் குற்றம்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த அமைப்புக்கு தங்கள் நாடு வழங்கும் நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்தார்.

என்றாலும் ஐ.நா. சபையில் இந்த தீர்மானம் நிறைவேறுவதை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடவில்லை.

ஒலிம்பிக் ஒத்திவைப்பால் ரூ.20,000 கோடி அதிக செலவு: ஜப்பான் ஏற்குமா?
ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைத்ததால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஜப்பான் அரசே ஏற்கும் என்று வெளியான தகவல்களுக்கு ஜப்பான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை ஒத்தி வைப்பதால் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கூடுதல் செலவுகளை ஜப்பான் அரசே ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்,  அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜப்பான், கூடுதல் செலவை பகிர்ந்து கொள்வது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad