Type Here to Get Search Results !

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் அல்ல, நிவாரண உதவிகள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, நிவாரண உதவிகளும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, 2-வது கட்டமாக, மே 3-ந் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். நோய்த் தொற்று உள்ளவர்களை முற்றிலுமாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை. மக்கள் தங்களை தனிமைப்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்துள்ளது. 7 வகையான அறிவுரைகளையும் மக்களுக்கு பிரதமர் வழங்கி உள்ளார். அதே நேரத்தில், நாட்டு மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல; மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள் பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளிலும் இல்லை; இன்றைய உரையிலும் இல்லை.

மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள் என்பதன் முழுமையான பொருள், சமூகமே முடக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான். முடக்கப்பட்ட அல்லது முடங்கி இருக்கும் இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப்போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப்போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே.

கொரோனா தொற்றில் இருந்து தங்களை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். அத்தகைய மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கனவே அறிவித்திருக்க வேண்டும்.

வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பலவீனமும், சமூக ஏற்றத் தாழ்வும், சாதியப் புறக்கணிப்பும் உள்ள இந்திய சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களை காப்பாற்றி கொள்ள பிரதமர் செய்யப்போகும் உதவிகள் என்ன?. அத்தகைய லட்சோப லட்சம் குடிமக்களை காப்பாற்றும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டாமா?

சீனாவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் அம்மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் முடங்கியது மட்டுமல்ல காரணம், முடங்கி இருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்தது; அதனால் அவர்களால் நிம்மதியாக வீட்டுக்குள் இருந்திட முடிந்தது. அத்தகைய சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்கி இருக்க வேண்டும்.

“மத்திய அரசின் 2020-2021 ஆண்டு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டினுடைய, நாட்டு மக்களுடைய பணம், நம்முடைய பணம்; இந்த ரூ.30 லட்சம் கோடியில் ரூ.65 ஆயிரம் கோடியை மக்களின் பசியை போக்க பிரதமர் தரமாட்டாரா?” என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?.

தமிழக அரசு கேட்ட நிதியைத் தரவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து; மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் மருந்துகள், அவர்களை காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயை கண்டறியும் கருவிகள் இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள் என்பதே, இப்போது மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்; உங்களிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்பும் பதில்கள்.

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப்போகிறீர்கள்? என்பதுதான் நான் இன்று முன்வைக்க விரும்பும் கேள்வியாகும்.

தி.மு.க. சார்பில் இன்று நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனுமதி இல்லை - போலீசார் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தி.மு.க. இன்று ஏற்பாடு செய்து இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால், கொரோனா மருத்துவம் சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி விட்டார்.

மேலும், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்யக்கூடாது என்றும், நிவாரண பொருட்களை அரசிடம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசின் அணுகுமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தி.மு.க. ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்துக்கு நோட்டீஸ் ஒன்றை கொடுத்தனர்.

அந்த நோட்டீசில், ஊரடங்கு உத்தரவு மத்திய-மாநில அரசுகளால் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை (இன்று) நடக்க உள்ள கூட்டத்தை தவிர்த்திட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் காணொலி காட்சி மூலம் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசை அண்ணா அறிவாலயத்தில் இருந்த தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தி.மு.க. சார்பில் நேற்று இரவு தேனாம்பேட்டை போலீசாருக்கு பதில் நோட்டீஸ் ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த நோட்டீசில், தமிழக சுகாதாரத்துறையின் வழி காட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி, தி.மு.க. சார்பில் கூட்டப்பட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் 11 பேர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் கூறினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad