Type Here to Get Search Results !

அரியலூரில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான நாராயணன்(வயது 65), கேரள மாநிலத்தில் வேலை பார்த்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்ததையொட்டி நாராயணன், கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனால் இது பற்றி அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

full-width கடந்த 1-ந் தேதி முதல் அவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் அவர் கடந்த 6-ந் தேதி அரியலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது டாக்டர்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர் கேரளாவுக்கு சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதித்தனர். 7-ந் தேதியன்று அவருடைய சளி, ரத்தம் போன்றவற்றை எடுத்து பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கான முடிவு இன்னும் வரவில்லை.

இந்நிலையில் தனி வார்டில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நாராயணன், அவர் தங்கி இருந்த அறையிலேயே நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள், அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில் கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் மூச்சுத்திணறி 2 வயது குழந்தை திடீர் சாவு
திருப்பத்தூரில் 2 வயது குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மெய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஜெயா. இவர்களுடைய 2 வயது பெண் குழந்தை கீர்த்தனா.

இவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாதவன் நகரில் உள்ள சுப்பிரமணியன் என்பவர் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் வந்தனர். ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கினர். இந்த நிலையில் பூமிநாதனின் குழந்தை கீர்த்தனாவுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து குழந்தைக்கு திடீரென சளித்தொல்லை ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து பூமிநாதன் நேற்று முன்தினம் திருப்பத்தூர் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னவாசல் அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி - ஜல்லிக்கட்டு காளையும் செத்தது
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மின்சாரம் தடைபட்டு பின்பு விடப்பட்டது. இந்நிலையில் அன்னவாசல் அருகே உள்ள சேந்தமங்களத்தை சேர்ந்த விவசாயியான பொப்பன் (வயது 65) என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பொப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் வயல்வெளிக்கு இரை தேடி சென்ற அதே பகுதியை சேர்ந்த அழகு என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையும் அதே மின்கம்பியை மிதித்து செத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து செத்த ஜல்லிக்கட்டு காளையை பிரேத பரிசோதனை செய்த பின்னர், அப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளை புதைக்கப்பட்டது.

இந்நிலையில் அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பொப்பன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். மின்கம்பியை மிதித்து விவசாயியும், ஜல்லிக்கட்டு காளையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad