Type Here to Get Search Results !

ஊரடங்கிற்குப் பிறகு கொரோனாவின் நிலை என்ன? கொரோனா எதிரொலி: இந்தியாவில் 4 கோடி தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும்: உலக வங்கி

தொற்று பரவலை தடுக்கவும், குறைக்கவும் ஊரடங்கு காலம் உதவியுள்ளதாக கொரோனா தடுப்பு உயர்மட்டக்குழு தலைவர் சி.கே. மிஸ்ரா தெரிவித்தார்.
ஊரடங்குக்கு பின் கொரோனா பரிசோதனை 24 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 14 நாட்களாக ஒரு பாதிப்பு கூட பதிவாகாத மாவட்டங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து மத்திய அரசின் செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அப்போது கடந்த 24 மணிநேரத்தில் 1409 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். கடந்த 28 நாட்களாக 12 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்படவில்லை என்றும், 14 நாட்களாக புதிய தொற்று கண்டுபிடிக்கப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொற்று பரவலை தடுக்கவும், குறைக்கவும் ஊரடங்கு காலம் உதவியுள்ளதாக கொரோனா தடுப்பு உயர்மட்டக்குழு தலைவர் சி.கே. மிஸ்ரா தெரிவித்தார்.  மார்ச் 23-ம் தேதி வரை 14 ஆயிரத்து 915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது போதாது என்றும், இன்னும் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சி.கே. மிஸ்ரா கூறினார்.

ஒட்டுமொத்தமாக ஊரடங்குக்கு பிறகு பரிசோதனைகள் 24 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 16 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு மையங்களில் பிளாஸ்மா சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் குணமடைந்த ஏராளமானோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

கொரோனா எதிரொலி: இந்தியாவில் 4 கோடி தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும்: உலக வங்கி எச்சரிக்கை
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டதால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என சுட்டிக்‍காட்டிய உலக வங்கி தெற்காசிய பிராந்தியங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்துள்ளனர். குறிப்பாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப்பகுதிகளுக்கு திரும்பினர் என சுட்டிக்காட்டிய உலக வங்கி, இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்புதல் சுமார் 23 சதவிகிதம் குறைந்து 64 பில்லியன் அமெரிக்க டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5.5 சதவிகித வளர்ச்சிக்கும், 2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட 83 பில்லியன் அமெரிக்க டாலர் ரசீதுகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாறுபாடு என்றும்,  பணம் அனுப்புவது வளரும் நாடுகளுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாகும் என்று கூறியுள்ளது.பணம் அனுப்புவது குடும்பங்களுக்கு உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை வாங்குவதற்கு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிக்கலாமா? - தொழில் அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிக்கலாமா? என்பது பற்றி தொழில் அதிபர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. அதன் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்ட தொழிற்சாலைகள் தவிர வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.


அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலையில் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத்தின் கியூப் இன்வெஸ்மெண்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெள்ளையன், டி.வி.எஸ். அன்டு சன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குனர் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராமராஜா, தோல் ஏற்றுமதிக் குழுமத்தின் தலைவர் அகில் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சீனிவாசன் ஆகிய தொழில் அதிபர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது என்.சீனிவாசன் பேசியதாவது:-

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. நீங்கள் தமிழகத்தை காப்பாற்றி மிகப் பெரிய நன்மையை செய்திருக்கிறீர்கள்.

இயக்கத்தை திரும்பத் தொடங்குவதில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் பிரச்சினைகள் உள்ளன. சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அதை கொண்டு செல்வதில் பிரச்சினைகள் உள்ளன. சிமெண்டை கொண்டு செல்லும்போது நடுவழியில் நிறுத்தப்படுவதும், டிரைவர்கள் அங்கிருந்து சென்றுவிடுவதும் பிரச்சினையாக உள்ளது.

சிமெண்டை தயாரித்து விற்பனை செய்வதில் பிரச்சினைகள் இல்லை. அனுமதி கிடைத்ததும் 10 நாட்களில் இயக்கத்தை தொடங்கிவிடலாம்.

வருமானம் இல்லாத நிலையில், நிதிச் சிக்கலில் இருக்கும்போது, ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் பல்வேறு இடற்பாடுகளை தொழிற்சாலைகள் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. வங்கிகளில் இருந்து பணம் பெற்று சம்பளத்தை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

உங்கள் முடிவின் அடிப்படையில் செயல்படுவோம். தொழிற்சாலை இயக்கத்தை அதற்கான தரத்தோடும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இயங்குவோம்.

கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது; முதல் மந்திரி பெருமிதம்
கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது என முதல் மந்திரி பிப்லப் குமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

திரிபுராவில் உதய்பூர் நகரில் முதன்முதலில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து கடந்த 6ந்தேதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் நலம் பெற்றார்.  இதனால் கடந்த 16ந்தேதி தனி வார்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  அவர் கண்காணிப்பு மையத்தில் இருந்து வருகிறார்.

இதேபோன்று ரைபிள் படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த 16ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் பன்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று நடந்த பரிசோதனையில், தொடர்ந்து இரண்டு முறை பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது என முதல் மந்திரி பிப்லப் குமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திரிபுராவின் 2வது நபக்கும் அடுத்தடுத்து நடந்த பரிசோதனைகளில் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.  இதனால் திரிபுரா கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்டு உள்ளது.

ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.  அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.  வீட்டில் இருங்கள் பாதுகாப்புடன் இருங்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பால் சிக்கன நடவடிக்கை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து - நிதி அமைச்சகம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால், சிக்கனத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

உயிர்க்கொல்லி நோயான கொரோனா இந்தி யாவை ஆட்டிப் படைக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரிவருவாய் குறைந்து, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிட வேண்டி உள்ளது.

இதனால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, சமீபத்தில் எம்.பி.க்களின் சம்பளத்தை குறைத்ததோடு, அவர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் ரத்து செய்து இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு ரத்து

இந்த நிலையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதாவது ஏப்ரல் மாதம் முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளமும், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.

நிதி அமைச்சகம் அறிக்கை

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படமாட்டாது. இதேபோல் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படமாட்டாது. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

என்றாலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.

நிலுவைத் தொகை

மீண்டும் 2021-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முடிவு செய்யும் போது, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்துக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும். ஆனால் 2020 ஜனவரி 1-ந் தேதி முதல் 2021 ஜூன் 30-ந் தேதி வரையிலான காலகட்டத்துக்கான நிலுவைத்தொகை வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சேமிப்பு எவ்வளவு?

அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதன் மூலம் இந்த நிதி ஆண்டிலும், 2021-2022-ம் நிதி ஆண்டிலும் மத்திய அரசு ரூ.37 ஆயிரத்து 530 கோடி சேமிக்க முடியும்.

அகவிலைப்படி உயர்வு வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகள் மத்திய அரசை பின்பற்றி செயல்படும். அப்படி மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் பட்சத்தில் ரூ.82 ஆயிரத்து 566 கோடி சேமிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

மே 3ந்தேதிக்கு பிறகு என்ன செய்வது என்பது பற்றி மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை; சோனியா காந்தி குற்றச்சாட்டு
மே 3ந்தேதிக்கு பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி மத்திய அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. விவசாயிகள், கட்டிட தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மற்றும் தொழில், வர்த்தகம் என்று பல்வேறு துறைகளில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

அதற்கு தீர்வு காணும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு யோசனைகளை தெரிவித்து பிரதமருக்கு நான் பலமுறை கடிதம் எழுதி இருக்கிறேன்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு தீர்வு காண மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய அரசு காங்கிரஸ் தெரிவிக்கும் யோசனைகளை பொருட்படுத்தாமல், பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு தீர்வு காண பரந்த மனப்பான்மையுடன் செயல்பட முன்வர வேண்டும்.

கொரோனா நோய்க்கிருமி பரவலின் காரணமாக நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில், பாரதீய ஜனதா சமூகத்தினரிடையே வெறுப்பு வைரசை பரப்பி வருகிறது.

தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகிற மே 3ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அதற்கு பின் நிலைமையை கையாளுவது எப்படி? என்பது பற்றி மத்திய அரசிடம் எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. முழுஅடைப்பு காலகட்டம் முடிந்த பிறகு நிலைமை மேலும் மோசமாக வாய்ப்பு உள்ளது.

கொரோனாவை கண்டறிவதற்கான மாற்று பரிசோதனை முறைகளோ, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான சரியான திட்டங்களோ இல்லை. துரதிருஷ்டவசமாக குறைந்த அளவிலேயே சோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதனை கருவிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. இருக்கும் கருவிகளின் தரமும் மோசமாக உள்ளது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்களிடம் போய் சேரவேண்டிய உணவு தானியங்கள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு தானியங்களை பெறவேண்டிய நிலையில் இருக்கும் 11 கோடி மக்கள், பொதுவினியோக திட்டத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ உணவு தானியங்கள், 1 கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை வழங்க வேண்டும்.

முதற்கட்ட ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள். பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி இருப்பதால் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும்

எனவே ஊரடங்கின் காரணமாக வேலையின்றி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு மற்றும் நிதி பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்ததுறையின் மூலம் மட்டும் 11 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். எனவே இந்த துறையை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

கொரோனாவை ஒழிக்க பாடுபடும் டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் கொரோனாவை ஒழிக்க அங்குள்ள அரசுகள் ஓய்வின்றி போராடுகின்றன. இதேபோல் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களும் பாடுபடுகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன்.  இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad