மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த ‘உமிழ்நீர்’ ஜிப்மரில் பரிசோதனை; கொரோனா தடுப்பு பணிக்கு தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 1500 பேரின் உமிழ்நீர் கொரோனா பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 1500 பேரின் உமிழ்நீர் கொரோனா பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஏராளமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளதா? என்பதை கண்டறிவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனை ஜிப்மர் மருத்துவ மனையில் மட்டும் நடந்து வந்தது. தற்போது கதிர்காமத்தில் உள்ள புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் சோதனைக்கு அனுப்பப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரிகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று தனி விமானத்தில் 1,500 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை ஆம்புலன்ஸ் மூலம் சுகாதார ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் இந்த உமிழ்நீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு மத்திய பிரதேச அரசுக்கு சோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட உள்ளன.

தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கரட்டுப்பாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை ஆகிய 5 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமை தாங்கினார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மா.பாவேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, வருவாய் துறை சார்பில் 14 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 35 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான், மருத்துவ காப்பீடு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர் தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்டக் குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும்.

மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகளுக்கு சிறு கடன்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக இப்பகுதியில் உள்ள மாவட்ட வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கருத்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் மாத தவணை செலுத்தும் தொகை 6 மாத காலத்திற்கு பின்பு செலுத்துமாறு செய்யப்படும். நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளது. இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள 5 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. மீதமுள்ள 10 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்படும். இதில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோபி சட்டமன்ற தொகுதி முழுவதும் 982 தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அம்மா உணவகத்தை பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. பேரூராட்சி பகுதிகள் ஊராட்சிகளை ஒட்டியே உள்ளதால் பெரிய அளவு உணவு தேவைகள் இல்லை. தற்போது பேரிடர் காலமாக உள்ளதால் அரசின் சார்பிலும் தனியார் பொதுநல அமைப்புகளின் சார்பிலும் நம்பியூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 30 நாட்களாக இப்பணிகள் நடக்கிறது.

அதன் மூலம் அரசு பணியாளர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என தினமும் 500 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்: கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி நந்திநகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் ஒன்றாக கூடி கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோர் தரப்பில் அறிவுறுத்தியபோதும் இவர்கள் அதை கேட்காமல் மைதானத்தில் கூடி கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

இதுதொடர்பாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் கூறுகையில், தர்மபுரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் திரண்டு விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் வெளியிடங்களில் நடமாடும் இளைஞர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Ad