Type Here to Get Search Results !

மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் இறங்கி அடம் பிடித்த தொழிலாளி - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



ஆவடியை அடுத்த பட்டாபிராம், காந்திநகர், கக்கன்ஜி தெருவைச் சேர்ந்தவர் மணவாளன் (வயது 46). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி லித்தியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மணவாளன், குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுபானம் கிடைக்காமல் கடும் விரக்தியில் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் குழாய் வழியாக இறங்கினார். பின்னர் கிணற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் நின்று கொண்டு,
எனக்கு உடனடியாக மதுபானம் வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மேலே ஏறி வரும்படி சமரசம் செய்ய முயன்றனர்.
வேறு வழியின்றி எப்படியோ ஒரு மதுபாட்டில் வாங்கி வந்து கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் அனுப்பினர். அதை வாங்கி ராவாக குடித்து விட்டு மீண்டும் மதுபானம் வேண்டும் என்று கூறி மேலே வராமல் அடம்பிடித்தார். இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் கிணற்றில் இறங்கி மணவாளனிடம் சமரசம் செய்து மேலே வரும்படி போராடினார்.
ஆனாலும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் அக்கம்பக்கத்தினர் மேலும் சிலர் அங்கு வந்து கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டு வந்தனர். ஆனால் அவர் மீண்டும் கிணற்றுக்குள் குதித்து மதுபாட்டில் கேட்டு தொடர்ந்து அடம் பிடித்தார். இதுபற்றி ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கி மணவாளனை மீட்க முயன்றனர். அப்போது அவர் தீயணைப்பு படை வீரர்களை தாக்கி அவர்களது கையை கடித்து, ரகளையில் ஈடுபட்டார். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் அவரை தீயணைப்பு வீரர்கள் சமாதானப்படுத்தி பாதுகாப்பாக கிணற்றில் இருந்து பத்திரமாக மேலே மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad