Type Here to Get Search Results !

போலீசார் சென்னையில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 உடனடி அபராதம்

சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 உடனடி அபராதம் விதித்தும், சாலையில் காரணமின்றி சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று தொற்றுநோய் மற்றும் பொது சுகாதார சட்டங்களின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதையொட்டி அத்தியாவசிய பொருட் களை வாங்குவதற்காக காலை முதலே மக்கள் வெளியில் வர ஆரம்பித்தனர்.

இதில் பலருக்கு, முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட விஷயம் தெரியவில்லை. இன்னும் சிலரோ சென்னை மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் சாலைகளில் உலா வந்தனர்.

சென்னை அண்ணா சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணிவது தொடர்பான உத்தரவை மிகவும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினர்.

அதன்படி முக கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு போலீசார் ரூ.500 உடனடி அபராதம் விதித்தனர். அதேபோல் சாலையில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜூன் 1-ந் தேதிக்கு மேல் வந்து வாகனங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

அதே சமயம் ஒரு சில இடங்களில் முக கவசம் அணியும் விவகாரத்தில் பொதுமக்களிடம் போலீசார் சற்று கனிவுடன் நடந்து கொண்டனர்.

முதல் நாள் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரியாமல் இருக்கலாம் என்று கருதி, முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அவர்களே முக கவசங்களை அணிவித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி எடுத்து வருகிறார்.

அதன்படி, ஆளில்லா குட்டி விமானம் மூலம் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து நகரின் முக்கிய வீதிகள் கண்காணிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும்போது இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. தேவை இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் இனிமேல் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே வரும் நபர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு திரும்ப தரமாட்டாது என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 4 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad