Type Here to Get Search Results !

சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் - ராமதாஸ்; சென்னையில் இதுவரை மொத்தம் 358 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொடர்பான செய்தியாளர் சந்திப்பை அரசு கைவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் கொரோனா தொடர்பான படப்பதிவுகளை அரசே ஊடங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், ஊடக அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, வைரஸ் தொற்றிலிருந்து நான்காவது தூண்களின் பிரதிநிதிகளைக் காப்பாற்ற அரசும், ஊடக நிறுவனங்களும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

சென்னை கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கை மீறி வாகனத்தில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து இன்று அதிகரித்துள்ளது. அண்ணா சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் விரைகின்றன. சென்னை என்ன கொரோனா காலத்து சுற்றுலாத்தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்... எச்சரிக்கை!

தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னை தான் முதலிடம். 10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பை விட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதிப்பு. அதன்பிறகும் பொறுப்பின்றி மக்கள் ஊர் சுற்றினால், அதை காவல்துறை அனுமதித்தால் கொரோனாவிடமிருந்து சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது!சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் போல வாகனங்கள் அணிவகுப்பதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாதா? அதிக கட்டமைப்பு கொண்ட போக்குவரத்து காவல்துறையால் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதா? அதையும் மீறும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய முடியாதா?

சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா?”

அம்மா உணவகங்களில் அனைவருக்கும் இலவச உணவு வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
“அம்மா உணவகங்கள் வரும் அனைவருக்கும் இலவச உணவு வழங்க வேண்டும்” என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை-எளிய மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒருவேளை உணவிற்குக்கூட நாள்தோறும் போராடி, அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதை போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்கிடுவதே இந்த நேரத்தில் இன்னலுக்கு உள்ளாகியிருப்போருக்கு இதயபூர்வமாக ஆற்றும் பணியாகும்.

கொரோனா நோய் தொற்றை தடுப்பதிலும் சுகாதாரப் பணிகளிலும் சுற்றுப்புறச்சூழலை நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து தூய்மையாக வைத்திருப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள். “ஒருமாத சம்பளம் கொடுக்கவில்லை” என்று கரூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது.

ஊதியம் கொடுப்பதைத் தாமதம் செய்வது, உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை மதித்து போற்றுவதாகாது. கரூரில் மட்டும் இந்த நிலைமையா? அல்லது மாநிலம் முழுவதுமே இந்த அவல நிலைமையா? என்பதை அரசு உடனடியாக கவனித்து, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்ட அனைத்து பணியிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குவது, அவர்கள் ஆற்றிவரும் மகத்தான பணிக்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் கொரோனா நோய் வந்திருக்கிறது என்று வெளிவந்துள்ள தகவல் வேதனையை தருகிறது.

அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனைகளை செய்வதும், அனைவருமே செய்திகளை மின்னஞ்சல் மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்புவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளாகும்.

ஊரடங்கில் சிக்கி, குறைந்தபட்ச வருமானமே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடப்பவர்கள் மின்சார கட்டணத்தை செலுத்த இயலாது. ஆகவே அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வதே அவர்களுக்கு அரசு நீட்டும் நேசக்கரமாக இருக்கும். ஆகவே, அம்மா உணவகங்களில் இலவச உணவு, தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, மின்சார கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரவும், அவசரகால தேவைகளுக்காகவும் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்ற இந்த நெருக்கடியில், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்வது மனித நேயமற்ற, இதயத்தில் ஈரமில்லாத செயலாகும்.

இந்த கெடுபிடிகள், மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வித்திடும். ஆகவே சுங்க கட்டண வசூலை உடனடியாக மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் - ராமதாஸ் எச்சரிக்கை!
ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன் என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நாளை காணொளி மூலம் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

19 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596- ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 635 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 178 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதல்வர் பழனிசாமி அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.


அம்பத்தூரில் முதல் தொற்று, ராயபுரத்தில் 116 பேர்
சென்னையில் இதுவரை மொத்தம் 358 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86 பேர் குணமடைந்து உள்ளனர்.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 46 பேரும், திருவிக நகரில் 42 பேரும், தேனாம்பேட்டையில் 42 பேரும்,  கோடம்பாக்கத்தில் 35 பேரும்,  அண்ணாநகரில் 27 பேரும் உள்ளனர்.மேலும், திருவொற்றியூரில் 12 பேரும், வளசரவாக்கத்தில் 11 பேரும், பெருங்குடியில் 8 பேரும், ஆலந்தூர் மற்றும் அடையாறில் தலா 7 பேரும்,   மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் முதல் தொற்று ஏற்பட்டு அங்கு 1 நபரும் உள்ளனர். சென்னையில் மணலி மண்டலத்தில் மட்டும் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.


மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்
திருவொற்றியூர் - 12 - 0 - 2
மணலி - 0 - 0 - 0
மாதவரம் - 3 - 0 - 3
தண்டையார்பேட்டை - 45 - 1 - 4
ராயபுரம் - 116 - 5 - 18
திருவிக நகர் - 42 - 1 - 13
அம்பத்தூர் - 1 - 0 - 0
அண்ணாநகர் - 27 - 1 - 10
தேனாம்பேட்டை - 42 - 0 - 6
கோடம்பாக்கம் - 35 - 0 - 16
வளசரவாக்கம் - 9 - 0 - 4
ஆலந்தூர் - 7 - 0 - 2
அடையார் - 7 - 0 - 4
பெருங்குடி - 8 - 0 - 3
சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.83% பேரும், பெண்கள் 34.17% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 77 பேருக்ககும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் நேற்று மட்டும் 22 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 71 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 4 நபரும், 80 வயதுக்கு மேல் 7 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 24 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 61 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 63 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 33 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 17 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

வயது = பாதித்தோர் எண்ணிக்கை
0-9 = 4
10-19 = 24
20-29 = 71
30-39 = 77
40-49 = 61
50-59 = 63
60-69 = 33
70-79 = 17
80 = 7

ராயபுரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 22 பேர் 20 முதல் 29 வயதுக்குள் உள்ளவர்கள்.இந்த நபர்கள் அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ராயபுரத்தில் நாளுக்கு நாள் உயரும் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த மூன்றடுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மேலும்,ராயபுரத்தில் தொற்றுள்ள பகுதிகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் யாரும் வெளியே வராதவாறு, அவர்களுக்கு தேவையான அனைத்தும் வீடுகளுக்கே கொண்டு செல்ல உள்ளதாகவும், இப்பகுதிகளில் வீடு வீடாக சோதனையை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை குறித்து ஐசிஎம்ஆர் தகவல்
கர்ப்பிணிகளுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் சோதனை செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் இருந்தாலும் , ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் இருந்தாலும் இல்லை 5 நாட்களில் குழந்தை பெற போகும் நிலையில் இருந்தாலும் தொற்று சோதனை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad