Type Here to Get Search Results !

ஒரகடம் அருகே, வட மாநில வாலிபர் திடீர் மூச்சு திணறலால் சாவு - கொரோனா தொற்றால் இறந்தாரா? 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ஒரகடம் அருகே, வட மாநில வாலிபர் திடீர் மூச்சு திணறலால் சாவு - கொரோனா தொற்றால் இறந்தாரா? விசாரணை
ஒரகடம் அருகே, வட மாநில வாலிபர் திடீர் மூச்சு திணறு காரணமாக உயிரிழந்தார், மேலும் கொரோனா தொற்றால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிப்ருல் இஸ்லாம் (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடன் பணிபுரிந்து வருபவர்கள் இவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என அவருடைய ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவலம் அருகே, 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
திருவலம் அருகே 3 பேரை கொன்று புதைத்த வழக்கில், கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஒரு பெண்ணிடம் சீக்கராஜபுரம் மோட்டூரைச் சேர்ந்த யுவராஜ் (வயது 26), திருவலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (20), சீக்கராஜபுரம் பல்லவர் நகரைச் சேர்ந்த வாசு (20) ஆகிய 3 பேர் சங்கிலியை பறித்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 பேரும் தனது கூட்டாளிகளான ஜெயபிரகாஷ், இளா என்கிற இளங்கோவன், சதீஷ், சூர்யா, சாரு ஆகிய 5 பேருடன் சேர்ந்து திருட்டு தொழில் போட்டியால் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் அகமது (26), திருக்கோவிலூர் தாலுகா தெளி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (25), அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (19) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்து திருவலம் அருகே கம்பராஜபுரம் பனந்தோப்பில் புதைத்ததாக கூறினர்.

யுவராஜ், அரவிந்தன், வாசு ஆகிய 3 பேரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 5 பேரை பிடித்து விசாரித்தால் தான் கொலைக்காக காரணம் தெரிய வரும். புதைக்கப்பட்ட 3 பேரின் பிணங்களை தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை செய்தால் தான் உண்மையான தகவல்கள் வெளிவரும், என திருவலம் போலீசார் தெரிவித்தனர்.

முக்கூடலில் பரிதாபம்: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
முக்கூடலில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பூவையா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். மும்பையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு அருணாஸ்ரீ (வயது 15), கிருஷ்ணவேணி ஆகிய 2 மகள்கள். 10-ம் வகுப்பு மாணவியான அருணாஸ்ரீ தற்போது பள்ளிக்கூட விடுமுறையில் உள்ளார். அவர் தினமும் வீட்டு வேலைகளை தாமதமாக செய்ததாக கூறப்படுகிறது.

இதனை நேற்று காலை ராமலட்சுமி கண்டித்துள்ளார். பின்னர் ராமலட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து. பலமுறை மகளை அழைத்தும் சத்தம் எதுவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சேலையால் அருணாஸ்ரீ தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அருணாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கால்தமிழக ஆம்புலன்ஸ் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தம்; வியாபாரி திடீர் சாவு குமரியில் பரபரப்பு
கொரோனா ஊரடங்கால் தமிழக ஆம்புலன்ஸ் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த வியாபாரி திடீரென இறந்தார்.

கொரோனா ஊரடங்கால் தமிழக ஆம்புலன்ஸ் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த வியாபாரி திடீரென இறந்தார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தாகா (வயது 52). வியாபாரியான இவர் குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி அங்கு தற்காலிக கடை அமைத்திருந்தார். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்டதால் அவரால் சொந்த மாநிலம் செல்ல முடியவில்லை. இதனால் அங்கேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அவருடைய காலில் பெரிய புண் ஏற்பட்டது. இந்த புண் ஆறாததால், அவருடைய உடல் நிலை மேலும் பாதிப்படைந்தது. சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக ஆம்புலன்சுக்கு அனுமதி மறுப்பு

குடும்பத்தினர் அவரை தொடர்ந்து கண்காணித்தால் உடல்நிலை சீராக இருக்கும் என்று டாக்டர்கள் கருதினர். இதனையடுத்து சொந்த ஊரான கொல்லம் மாவட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் வாகனத்தில் தாகாவை ஏற்றிக் கொண்டு, கேரளா நோக்கி புறப்பட்டது.

இருமாநில எல்லையான களியக்காவிளையில் குமரி போலீசார் அந்த ஆம்புலன்சை கேரளாவுக்கு செல்ல அனுமதித்தனர். இந்த சோதனைச்சாவடியில் இருந்து சிறிது தொலைவில் கேரள மாநில இஞ்சிவிளை சோதனைச்சாவடி இருந்தது. அங்கிருந்த கேரள போலீசார், தமிழக ஆம்புலன்சை கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இந்த நடவடிக்கையை கேரள போலீசார் மேற்கொண்டனர். இதனால் அந்த ஆம்புலன்ஸ் மீண்டும் குமரிக்கு திரும்பியது. இதற்கிடையே தாகாவின் உடல்நிலை திடீரென மோசமானது. எனவே, குளச்சலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தமிழக ஆம்புலன்சை கேரளாவுக்கு செல்ல அனுமதிக்காததால் தான் தாகா இறந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் தாகாவின் உடலை கேரளாவுக்கு கொண்டு செல்வதில் முடிவு ஏற்படும். மேலும், கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் அவர் இறந்ததால், அந்த நபரின் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடையம் அருகே, செல்போன் கடை, வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கடையம் அருகே செல்போன் கடை, வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் மங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 46). இவர், பொட்டல்புதூர் மெயின் ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் கடை திறக்கவில்லை. சம்பவத்தன்று இரவில் மர்மநபர்கள் அவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், தட்சணாமூர்த்தி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த 4 செல்போன்கள், பீடி, சிகரெட் உள்ளிட்ட ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும், பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

பொட்டல்புதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (44). இவருடைய வீட்டு மாடி வழியாக உள்ளே புகுந்த மர்மநபர், அங்கிருந்த பீரோவை திறந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பியோடி விட்டார்.

பொட்டல்புதூரில் மட்டன் கடை நடத்தி வரும் அப்துல் ரகுமான் (34) என்பவர் தன்னுடைய வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது அதில் இருந்த பெட்ரோலை மர்மநபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த 3 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே நாள் இரவில் கடை மற்றும் வீட்டில் மர்மநபர்கள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad