Type Here to Get Search Results !

‘டிக்-டாக்’ மூலம் ஒருதலைக்காதல்: தஞ்சையில் இருந்து நடந்து மதுரை வாலிபரை காண வந்த பெண்; 2 பேரை கடித்து குதறிய கரடி மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்

‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒருதலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண தஞ்சையில் இருந்து மதுரை வரை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். இவர் டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமுகமானார். அந்த பெண் ஒருதலையாக அந்த வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அந்த இளைஞர் அந்த பெண்ணுடன் டிக்-டாக் பழக்கத்தை கைவிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த பெண், தனது காதலில் தீவிரமாக இருந்தார்.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த வாரம் அந்த பெண், மதுரை வாலிபரை பார்ப்பதற்காக தஞ்சையில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக மதுரைக்கு நடந்து வருவதாக கூறி, டிக்-டாக் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தனியாக மதுரையை நோக்கி நடந்துவருவதாகவும், சாலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகளையும், காதல் பாடல்களை பாடி, தற்போது எந்த இடத்தில் வருகிறேன் என்பதையும் வீடியோ பதிவாக செல்போனில் படம் பிடித்து அவ்வப்போது அதனையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் நேற்று மதியம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் நடந்து வந்துவிட்டதாகவும், அந்த வாலிபரின் பெயரை குறிப்பிட்டு தன்னை மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்து செல்லும்படி கூறி ஒரு வீடியோவை டிக்-டாக் மூலம் பதிவு செய்தார். இவரது வீடியோவை வலைத்தளங்களில் பார்க்கும் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கியும், இன்னும் சிலர் அவரை வசை பாடியும், இன்னும் சிலர் போலீசார் இதை கவனிக்க வேண்டும் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

களக்காடு அருகே பரபரப்பு 2 பேரை கடித்து குதறிய கரடி மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்

களக்காடு அருகே 2 பேரை கரடி கடித்து குதறியது.

கரடி அட்டகாசம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பொத்தையில் கடந்த சில மாதங்களாக 4 கரடிகள் சுற்றி திரிந்து வருகின்றன. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள தெற்கு அப்பர்குளத்தில் நேற்று காலை கரடி புகுந்தது. இதைப்பார்த்த சிலர் அதனை அங்கிருந்து விரட்டினர். அதன் பின்னர் கரடி அங்குள்ள தெருக்களில் சுற்றி வந்தது. கரடியை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இளைஞர்கள் திரண்டு கரடியை விரட்டினர்.

தகவல் அறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ தலைமையில் வனச்சரகர்கள் புகழேந்தி, பாலாஜி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடி தெற்கு அப்பர்குளத்தில் இருந்து, வடக்கு அப்பர்குளம், நடுவகுளம், செட்டிகுளம் வழியாக சுமார் 10 கி.மீ.தூரம் ஓடிக் கொண்டே இருந்தது. வனத்துறையினரும், இளைஞர்களும் கரடியை பிடிக்க துரத்தி சென்றனர்.

2 பேர் படுகாயம்

தப்பிய கரடி செட்டிகுளம் வயல்வெளிக்குள் நுழைந்தது. கரடி வயலுக்குள் ஓடி வருவதை பார்த்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓட்டம் பிடித்தனர். அப்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேல உப்பூரணியை சேர்ந்த விவசாயி செல்வராஜை (வயது 60) கரடி கடித்து குதறியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல் வேட்டை தடுப்பு காவலர் சுந்தரும், கரடி கடித்ததில் படுகாயம் அடைந்தார். அதனைதொடர்ந்து கரடி வாழை தோட்டத்துக்குள் சென்று பதுங்கி கொண்டது.

நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் 3 முறை துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து செலுத்தினர். இதனால் கரடி மயங்கி விழுந்தது. மயங்கிய கரடியை வனத்துறையினர் மீட்டு அதனை களக்காடு செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட கரடி 7 வயது ஆண் கரடி ஆகும். காலை 6 மணிக்கு கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 4 மணிக்கு கரடியை வனத்துறையினர் பிடித்தனர். கரடி அட்டகாசத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி: 3 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கே.எட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 26). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் சதாசிவம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (40), கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் (24) உள்பட 7 பேர் சாலூருக்கு முயல் வேட்டைக்கு புறப்பட்டனர்.

அந்த பகுதியில் உள்ள பாகற்காய் தோட்டம் அருகில் சென்றனர். அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சதாசிவம் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலியானார். அவருடன் சென்ற அன்பழகன், கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 3 பேரும் காயமின்றி தப்பினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அன்பழகன், கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக லட்சுமணன் (52), அவரது மகன் சபரி (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவொற்றியூரில் கஞ்சா தகராறில் வாலிபர் அடித்துக்கொலை - கடற்கரையில் உடல் புதைப்பு
திருவொற்றியூர் ராஜா கடை ராமானுஜம் தெருவைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் ஜெயராம் (வயது 18). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 25-ந்தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து தனது புத்தம் புதிய மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றவர், அதன்பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இதையடுத்து தனது மகன் மாயமானதாக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் மனு கொடுத்தார். அதனுடன் மாயமான ஜெயராமின் நண்பர் ஒருவர் கொடுத்ததாக ஒரு கால் ரெக்கார்டு ஆடியோவையும் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மாயமான ஜெயராமை தேடினர்.

இதற்கிடையில் ரேவதி கொடுத்த கால் ரெக்கார்டு ஆடியோவை போலீசார் போட்டு கேட்டனர். அதில் பயங்கர இரைச்சல் சத்தத்துக்கு நடுவில் சிலர் கல்லை எடு, குழி தோண்டு என பேசும் சத்தம் கேட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், 25-ந்தேதி ஜெயராமுக்கு அவருடைய நண்பரான விக்கி என்பவர் முதலில் போன் செய்தார். போனை எடுத்த ஜெயராம், வண்டி ஓட்டுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 2-வது முறையாக போன் செய்தபோது இரைச்சல் சத்தம் அதிகமாக இருந்ததால் அதனை போனில் ரெக்கார்டு செய்துள்ளார். 9.45 முதல் 9.49 வரை விக்கியின் போனில் கால் ரெக்கார்டு ஆகி உள்ளது.

அதன்பிறகு 9.50 மணிக்கு போன் செய்தபோது ஜெயராமின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பயந்து போன விக்கி, தன்னுடைய செல்போனில் இருந்த கால் ரெக்கார்டு ஆடியோவை ஜெயராமின் மற்றொரு நண்பரான மதனுக்கு அனுப்பி உள்ளார். அவர், அந்த ஆடியோவை ஜெயராமின் தாயாரிடம் கொடுத்த பிறகே அவர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என தெரியவந்தது. இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து ஜெயராம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதற்கிடையில் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (19) என்பவரிடம் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தனர். அதில் ஜெயராம் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.

கஞ்சா போதைக்கு அடிமையான ஜெயராம், திருவொற்றியூர் சுங்கச்சாவடி எதிரே உள்ள என்.டி.ஓ.குப்பம் கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்து 25-ந்தேதி இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார்.

அங்கிருந்த சிலர் தங்களிடம் கஞ்சா இல்லை. பணம் கொடுத்தால் வாங்கி வந்து தருவதாக கூறினர். அதன்படி ஜெயராம் ரூ.600 கொடுத்தார். பணத்தை வாங்கி சென்றவர்கள், சிறிது நேரத்தில் திரும்பி வந்து, கஞ்சா கிடைக்கவில்லை. போலீஸ் விரட்டுகிறார்கள் என்றனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராம் அங்கிருந்த ஒருவரை தாக்கினார். இதனால் அங்கிருந்த மற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து அருகில் இருந்த பாட்டிலை எடுத்து ஜெயராமை தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ஜெயராம், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பயந்துபோன அவர்கள், கொலையை மறைக்க கடற்கரையில் குழி தோண்டி ஜெயராமின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது.

நாகராஜ் கொடுத்த தகவலின்பேரில் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதி கடற்கரையில் பதுங்கி இருந்த மவுத்தையா(19), சூர்யா (20), கணேஷ் (21), ஜோசப் (19), அலிபாய் (21) ஆகிய மேலும் 5 பேரை புகார் பெறப்பட்ட 7 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, தாசில்தார் கணேசன், தடய அறிவியல் துறை அதிகாரி நிர்மலா ஆகியோர் மேற்பார்வையில் கைதான 6 பேரையும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஜெயராம் உடலை புதைத்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். அதன்பின்பு ஜெயராமின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைதான 6 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அடுத்த விசாரணை தொடங்கும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீடாமங்கலத்தில்செல்போன் வெடித்து சிதறியதில் இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது பரிதாபம்
நீடாமங்கலத்தில், தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டன.

தந்தையுடன் பேசினார்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் சந்து பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி(வயது 18). இவர் நேற்று காலை செல்போனில் வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் ‘வீடியோ கால்’ மூலமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. செல்போனின் உடைந்த பாகங்களின் துகள்கள், ஆர்த்தியின் கண்களுக்குள் புகுந்தன. துகள்கள் காதுகளுக்குள்ளும் சென்றது. இதனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்கள் பாதிப்பு

இரு கண்களுக்குள்ளும் துகள்கள் புகுந்து பாதிக்கப்பட்ட நிலையில் ஆர்த்தி வலியால் அலறி துடித்தார். அவரை உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் டாக்டரின் பரிந்துரையின் பேரில் ஆர்த்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

செல்போனை சார்ஜரில் போட்டு பேசிக்கொண்டிருந்ததால் செல்போன் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செல்போன் வெடித்த சத்தம் கார் டயர் வெடித்தது போல் இருந்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டது, அந்த பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோடம்பாக்கத்தில் வீட்டில் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர், எனக்கு 17 வயதில் மகள் உள்ளார்.

அவர், சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி கல்லூரிக்கு சென்ற எனது மகள், அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் மாயமான எனது மகளை கண்டுபிடித்து தருமாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து, மாயமான 17 வயது சிறுமியை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பெரியார் சாலையைச் சேர்ந்த உசைனுல் முசரப்(வயது 19) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் தேடினர்.

போக்சோ சட்டத்தில் கைது

அதில், அவர் கோடம்பாக்கம், சாமியார் மடம், முதல் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், உசைனுல் முசரப்புடன் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை மீட்டனர். விசாரணையில், இருவரும் ஒரே கேட்டரிங் கல்லூரியில் படித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதற்கிடையில் படிப்பை பாதியில் விட்ட முசரப், ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்தபடி, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி இருந்தார்.

அப்போது அந்த சிறுமியை முசரப் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உசைனுல் முஷரப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடும்பத் தகராறில் 3-வது மனைவியை குத்திக்கொன்ற பார் ஊழியர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீவன்சன் (வயது 52). இவர், கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். இவருக்கு 3 மனைவிகள். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஸ்டீவன்சன், வல்லாஞ்சேரி கிராமத்தில் தனது 3-வது மனைவி உமா (38) என்பவருடன் வீட்டிலேயே இருந்து வந்தார்.

நேற்று அதிகாலையில் ஸ்டீவன்சன், அவருடைய 3-வது மனைவி உமா இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டீவன்சன் வீட்டில் இருந்த கத்தியால் உமாவின் நெற்றியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த உமா, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பார் ஊழியர் தற்கொலை

இதனால் பயந்து போன ஸ்டீவன்சன், நந்திவரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குமுதாவின் மகள் திவ்யாவுக்கு போன் செய்து குடும்பத் தகராறில் உமாவை கொலை செய்து விட்டதாகவும், தானும் சாகப்போவதாகவும் கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். பின்னர் ஸ்டீவன்சன், வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையில் தனது தந்தை போனில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்யா, தனது உறவினர்களுடன் வல்லாஞ்சேரிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் உமா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஸ்டீவன்சன் தூக்கில் பிணமாக தொங்கினார். பூட்டிய வீட்டுக்குள் இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலையான உமா, தற்கொலை செய்த ஸ்டீவன்சன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டிரோன் மூலம் நடத்திய தேடுதல் வேட்டை: முந்திரித்தோப்பில் சாராயம் காய்ச்சிய பெண் கைது
டிரோன் கேமரா மூலமாக நடத்திய தேடுதல் வேட்டையில் முந்திரித் தோப்பில் சாராயம் காய்ச்சிய பெண் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரித்தோப்புகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக, ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காடாம்புலியூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சிறுதொண்டமாதேவி கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்புகளில் மாவட்ட கலால் பிரிவு துனை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார், டிரோன் கேமரா மூலமாக சோதனை நடத்தினர்.

பெண் கைது

அப்போது, முந்திரித் தோப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்ததை அடையாளம் கண்டு, அதை நோக்கி டிரோன் கேமராவை செலுத்தியபோது அங்கு பதுங்கியிருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் அந்த இடத்தை சோதனை செய்தனர். அதில், 15 லிட்டர் சாராயம், 20 லிட்டர் முந்திரி பழ ஊறல் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இவற்றை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே ஊரை சேர்ந்த அறிவழகன்(வயது 48) மற்றும் அவரது மனைவி லட்சுமி வயது( 42) ஆகியோர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக லட்சுமி கைது செய்யப்பட்டார். தலைமறைவான அறிவழகனை பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு வலைவீசி தேடி வருகின்றனர்.

மாங்காடு அருகே, டிரைவர் கொலையில் 3 பேர் கைது - கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலம்
மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). டிரைவரான இவர், நேற்று முன்தினம் நண்பருடன் அங்குள்ள செங்கல் சூளைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மர்மநபர்களுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மர்மநபர்கள் ரஞ்சித்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போரூர் உதவி கமிஷனர் சம்பத், மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பொற்பாதம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக மலையம்பாக்கத்தைச் சேர்ந்த விமல் (22), பிரேம்குமார்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேரை திருமழிசையில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைதான விமல், போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-

தாயுடன் கள்ளத்தொடர்பு

எனது தாயுடன் ரஞ்சித்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதை பலமுறை நேரில் பார்த்த நான், ரஞ்சித்குமாரை கண்டித்தேன். எனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் நான், எனது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்தேன்.

எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ள ரஞ்சித்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான், எனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டேன். அதன்படி ஊரடங்கு காரணமாக வேலை இன்றி வீட்டில் இருந்த ரஞ்சித்குமாரை, அவரது நண்பர் ஒருவர் மூலமாக சிகரெட் பிடிக்க வரும்படி செங்கல் சூளைக்கு வரவழைத்து வெட்டிக்கொலை செய்தேன். எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கேளம்பாக்கம் அருகே, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்மநபர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார்.

முன்னதாக எச்சரிக்கை அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராவுக்கு செல்லும் வயரை துண்டித்தபோது, மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு குறுஞ்செய்தி தகவல் சென்றது. உடனடியாக அவர்கள், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

போலீசாரை கண்டதும், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.3.5 லட்சம் தப்பியது. இதுபற்றி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 18 வயது சிறுவனை கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வேடிப்பிள்ளை. இவர்களுக்கு 2 வயதில் தில்ஷன் என்ற மகன் இருந்தான். நேற்று காலை தில்ஷன், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் மகன் ரித்தினுடன்(6), அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது சிறுவர்கள் 2 பேரும் குட்டைக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குட்டைக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தில்ஷனும், ரித்தினும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன், தாசில்தார் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவர்கள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருக்கோவிலூர் அருகே தொழிலாளி அடித்துக் கொலை 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 50), தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரேணு(45). வீட்டின் முன்பு உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்வது தொடர்பாக பக்தவச்சலம், ரேணு ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரேணு, அவரது மனைவி கோவிந்தம்மாள்(40), மகன் முருகன்(20), மகள் அஞ்சலைதேவி(19) மற்றும் ரேணுவின் மாமனாரான திருவண்ணாமலை மாவட்டம் சு.வாளவெட்டி கிராமத்தை சேர்ந்த சதானந்தம்(65) ஆகியோர் பக்தவச்சலத்தை அடித்தனர். இதில் அவர் நிலை தடுமாறி வீட்டு வாசற்படியில் விழுந்தார்.

5 பேர் கைது

இதில் தலையில் பலத்த அடிபட்ட பக்தவச்சலத்தை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பக்தவச்சலம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பக்தவச்சலத்தை அடித்து கொலை செய்ததாக ரேணு, சதானந்தம், கோவிந்தம்மாள், முருகன், அஞ்சலைதேவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். ஊரடங்குக்கு மத்தியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது
ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 43). ஜவுளி நிறுவன உரிமையாளர். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் ருந்த 6 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

திருடர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயரத், பழனிவேல், ராமராஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

திருட்டு போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சம்பவத்தன்று 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு பெரியசேமூர் எல்லப்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (38), மேட்டூர் நங்கவள்ளியை சேர்ந்த ஏழுமலை (28), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா (24) ஆகியோர் என்பதும், மற்றொருவர் ஈரோடு எல்லப்பாளையத்தை 18 வயது வாலிபர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சேர்ந்து இளங்கோவின் வீட்டில் நகை-பணத்தை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை மீட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad