Type Here to Get Search Results !

இந்தியாவில் தீவிர அச்சுறுத்தலாக மாறும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது; தமிழகத்தில் கொரோனா - சிவப்பு மண்டலத்தில் புதிதாக இணைந்த மாவட்டங்கள்

இந்தியாவில் தீவிர அச்சுறுத்தலாக மாறும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது
உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முழுவதும் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077ல் இருந்து 24,506 ஆக உயர்வடைந்திரு்ந்தது. மேலும் பலி எண்ணிக்கை 775 ஆக உயர்வடைந்து இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 24 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,210 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 779 ஆக உயர்ந்துள்ளது என்றும், மிக அதிகமாக மராட்டியத்தில் சுமார் 301 பேரும், குஜராத்தில் 127 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1490 ஆகவும், பலி எண்ணிக்கை 56 பேராகவும் உள்ளது.

கடும் பாதிப்பில் மும்பை தாராவி

மும்பையில் அதிகம் தமிழர்கள் வாழும் தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 உயிரிழப்புகள் உட்பட இதுவரை தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 241-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவில் ஊரடங்கை மே மாதம் 18 வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா - சிவப்பு மண்டலத்தில் புதிதாக இணைந்த மாவட்டங்கள்
28 நாட்களுக்குள் புதிதாக எந்த கொரோனா நோயாளியும் வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம் அதாவது பாதுகாப்பாக மண்டலமாக கருதப்படும்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 -ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர்.  தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்புவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் அதிகபட்சமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 29 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை எந்தெந்த மாவட்டங்கள் 'ஹாட் ஸ்பாட்’, ‘ஹாட் ஸ்பாட் இல்லாதவை’ என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஹாட் ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) என்றால் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்களாகும்.
இங்கு அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அல்லது பரவல் விகிதம் அதிகரிப்பு என்பதை குறிக்கும். அந்த வகையில் 15 பேர் அல்லது 4 நாட்களுக்குள் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு ஆவது என்ற வகையில் தமிழக சுகாதாரத்துறை மண்டலங்களை பிரிந்து அறிவித்துள்ளது.

தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, சேலம், நாகை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்த , தஞ்சை, காஞ்சி, ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களும் தற்போது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருந்த நிலையில், தற்போது அது 29 மாவட்டமாக அதிகரித்துள்ளது.

மேலும், திருவண்ணாமலை, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள் என்றாலும் ஆரஞ்சு மண்டலமாக இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 15 நபருக்கு குறைவாக தொற்று உள்ளது.

28 நாட்களுக்குள் புதிதாக எந்த கொரோனா நோயாளியும் வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம் அதாவது பாதுகாப்பாக மண்டலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad