Type Here to Get Search Results !

உலகம் முழுவதும் 23 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,63,834 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது; குஜராத்தில் அசுர வேகத்தில் பரவுகிறது
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களின் இறப்பு விகிதத்தை ஒப்பிடும் போது, உயிரிழப்பு குறையத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. ஸ்பெயினில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத வகையில் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்துள்ளது. தென்கொரியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக சரிந்துள்ளது.

ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் பாதிப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இவ்விரு நாடுகளிலும் உயிரிழப்பு தலா 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தற்போது பிரான்சிலும் உயிரிழப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஜெர்மனியில் பாதிப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,63,834 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. குஜராத்தில் வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 1½ லட்சம் பேரின் உயிரை குடித்தும், கொரோனாவின் கோரப்பசி அடங்கவில்லைபோல தொடர்ந்து பலருடைய உடலுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் கோரப்பார்வையில் சிக்கி இந்தியாவிலும் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று 16 ஆயிரத்தை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரம், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 16,116 ஆக அதிகரித்துள்ளதாக காட்டுகிறது. கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி நேற்று 31 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலியானவர்கள் எண்ணிக்கையும் 519 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,600-ஐ தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் 1,800-க்கும் அதிகமானோரையும், 3-வது இடத்தில் இருக்கும் மாநிலமான குஜராத்தில் 1,700-க்கும் மேற்பட்டவர்களையும் கொரோனா பாதித்துள்ளது. அடுத்த இடங்களில் உள்ள தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தலா 1,400-ஐ தாண்டி உள்ளது. உத்தரபிரதேசத்திலும் கொரோனாவால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குஜராத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. 3 நாட்களுக்கு முன்பு வரை அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே இருந்த நிலையில், கடந்த 3 நாட்களில் 700-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 367 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த 3 மாநிலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, 3-வது இடத்தை குஜராத் பிடித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் கொரோனோ வைரஸ் பரவி வருகிறது. ஆந்திராவில் இந்த வைரஸ் தொற்றால் 640-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் 16 பேர் பலியாகி உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad