Type Here to Get Search Results !

சென்னை ராயபுரத்தை சேர்ந்த தாய், 2 மகன்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்; 5 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று

கடல் வழிமார்க்கமாக படகு மூலம் வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகன்களை 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கொரோனா வைரஸ் பரவி வருதை தடுக்கும் பொருட்டு ஊரடங்குக்கு உத்தரவு விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலை முழுவதும் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு மகன்களுடன் சென்னை ராயபுரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் மாமல்லபுரம் வந்து, இங்குள்ள மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

தனிமைப்படுத்த உத்தரவு

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மாமல்லபுரம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் வருவாய்த்துறை அதிகாரி ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், படகு மூலம் பெண் உள்பட 3 பேர் சென்னையில் இருந்து முறைகேடான பயணம் செய்து வந்து தங்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும், இதைத்தொடர்ந்து, அப்பெண் உள்பட தங்கியிருந்த வீட்டில் உள்ள 3 பேரையும் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உத்தரவிட்டு அந்த வீட்டின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டினர்.

கொரோனா பரிசோதனை

தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றான ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், 3 பேரும் அங்கிருந்து வந்தவர்கள் என்பதாலும் 21 நாட்களுக்கு பிறகு 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்து உள்ளனர்.

இச்சம்பவத்தால் மாமல்லபுரம் மீனவர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டியத்தில் இருந்து பஸ்சில் வந்த சென்னை மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் முடிவு
மராட்டியத்தில் இருந்து பஸ்சில் வந்த சென்னை மாணவர்கள் 13 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் சென்னையை சேர்ந்த 13 மாணவர்கள், தனியார் பஸ் ஒன்றின் மூலம் சென்னை நோக்கி நேற்றுமுன்தினம் புறப்பட்டு வந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியை அந்த சொகுசு பஸ், கடந்து செல்ல முயன்ற போது, தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மராட்டிய மாநிலத்தில் இருந்து சொகுசு பஸ் வந்ததால், அதில் வந்த மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிய ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் வரும் வரை கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியானதில், சென்னை மாணவர்கள் 13 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து மினி பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 59 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 5 மாத ஆண் குழந்தை உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 45 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று புதிதாக காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 5 மாத ஆண்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் குழந்தையின் 25 வயது நிரம்பிய தாயார், 26 வயது நிரம்பிய தந்தை மற்றும் 48 வயது பாட்டி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்சூரன்ஸ் ஊழியரின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 729 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் 10 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 3,200 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தவும், ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பெரம்பலூரில் கொரோனாவுக்கு பாதிப்பான தீயணைப்பு வீரர்-கல்லூரி மாணவருடன் தொடர்பில் இருந்த 119 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை
பெரம்பலூரில் கொரோனாவுக்கு பாதிப்பான தீயணைப்பு வீரர்- கல்லூரி மாணவருடன் தொடர்பில் இருந்த 119 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

முடிவுகள் வரவில்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரில் ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார். மீதமுள்ள 6 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட துறைமங்கலத்தில் வசிக்கும் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரரும், துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசித்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை பதாகை ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே துறைமங்கலம் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீயணைப்பு வீரருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்களுக்கும், அவர் தங்கியிருந்த தீயணைப்பு வீரர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், இதே போல் கல்லூரி மாணவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 119 பேரின் சளி, ரத்த மாதிரிகள் சுகாதாரத்துறையினரால் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. அந்த முடிவுகள் இன்னும் வரவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

1,200 பேருக்கு கொரோனா இல்லை

துறைமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 கிலோ மீட்டர் பகுதிகளை தொடர்ந்து 14 நாட்களுக்கு சுகாதாரத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் போடுவது மற்றும் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறையினர் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக சென்று யாருக்கும் தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளதா? வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பி வந்துள்ளனரா? என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 1,300 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில், 1,200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையின் முடிவில் வந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

சேலத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி
சேலத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், 2 கர்ப்பிணிகள், தாய்-மகன் என 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு 30-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் சுற்றுலா சென்றனர். இந்தநிலையில் அவர்கள் சேலம் வந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று கோவிலுக்கு சென்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. இதுதவிர கோவிலுக்கு சென்றவர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் சென்ற டிரைவர்கள் உள்பட 26 பேர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா சந்தேகம்: கோவை தனியார் ஆஸ்பத்திரிகளில் 11 பேர் அனுமதி
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் நேற்று 11 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதை மீறி வெளியே செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. அதில் பலர் குணமடைந்து வீட்டிற்கு சென்று உள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கும், கொரோனா சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

11 பேர் அனுமதி

கொரோனா சந்தேகத்துடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 156 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 75 பேர் என்று மொத்தம் 231 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு அறிக்கை இன்னும் வரவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் கொரோனா சந்தேகத்துடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 ஆண்கள், 4 பெண்கள், ஒரு ஆண் குழந்தை அடங்கும். அவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் நேற்று அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் சளி, ரத்த பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கொரோனா பாதிப்பு யாருக்கு உள்ளது என்பது தெரிய வரும். அவர்கள் மட்டும் உடனடியாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

ஓசூர் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை: 2-வது பரிசோதனையில் உறுதியானது
ஓசூர் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று 2-வது பரிசோதனையில் உறுதியானது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடந்த 24-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, தான் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், கடந்த மாதம் 21-ந் தேதி தனது நிறுவனத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அதனால் நிறுவனத்தில் இருந்து அனைத்து ஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பியதாகவும், 34 நாட்கள் தான் தனிமையில் இருந்ததாகவும், தனது நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று வந்ததால் தான் சுய பரிசோதனையாக மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த தனியார் நிறுவன ஊழியரை, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஓசூர் மருத்துவமனையில் முதல் கட்ட பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

இந்த 2 மாதிரிகளும் நேற்று ஆய்வு செய்யப்பட்டு மாலை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி 2 மாதிரிகளிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தொடர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் ஏட்டுக்கு கொரோனா: பெருங்குடிக்கு வெளிநபர்கள் வர தடை; எல்லைகள் மூடல்
திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடியில் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியின் எல்லை மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட ஏட்டு குடும்பத்தினர் உள்பட 41 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பெருங்குடியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சிவக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி, ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீஸ் ஏட்டுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட 41 பேருக்கு ரத்த மாதிரி, சளி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டுவிடம் நெருக்கம் உள்ளவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் ஆசிக், பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாமுருகேசன் ஊராட்சி செயலர் அழகு ஆகியோர் மேற்பார்வையில் போர்க்கால நடவடிக்கையாக நேற்று தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதற்கிடையே பெருங்குடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு போலீஸ் ஏட்டு குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள பகுதி களில் தகரம் மூலம் தடுப்பு அமைத்து எல்லை மூடப்பட்டது. 12 பேர் கொண்ட தன்னார்வலர்களின் செல்போன் எண்கள் கொண்ட துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது. ஆகவே அவர்கள் தன்னார்வலர்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநபர்கள் யாரேனும் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தர்மபுரி லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனையில் உறுதியானது
தர்மபுரி லாரி டிரைவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் மாயமானார். அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தானிப்பாடியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது கூறியதாவது:-

ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள லாரி டிரைவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad