Type Here to Get Search Results !

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா; ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் முறைகேடு: 145% கொள்ளை லாபம் அம்பலம்

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா: பலி எண்ணிக்கை 211,450 ஆக அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 211,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,063,269 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 921,427 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,302 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 886 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 6,362 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 56,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,010,356 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,977 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199,414 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,521 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229,422 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,293 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,842 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,092 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157,149 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,806 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,472 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,207 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,687 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,126 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158,758 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,518 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,245 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,830 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 2,900 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,665 பேரும், பிரேசில் நாட்டில் 4,543 பேரும், சுவீடன் நாட்டில் 2,274 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,707 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,102 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,351 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் முறைகேடு: உயிர்காக்கும் விஷயத்திலும் கூட 145% கொள்ளை லாபம் அம்பலம்
சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தற்போது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெஸ்ட் கிட்டை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கும், விநியோக நிறுவனத்திற்கும் இடையேயான வழக்கால், உயிர்காக்கும் விஷயத்திலும் 145% கொள்ளை லாபம் பார்த்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டது. இதன்படி, 5 லட்சம் கிட்கள் வாங்க ஆர்டர் தரப்பட்டன. தமிழக அரசும் 24,000 சீன கிட்களை வாங்கியது.

* 5 லட்சம் கிட்கள் வாங்க மத்திய அரசு ஆர்டர்
* தமிழக அரசும் 24,000 சீன கிட்களை வாங்கியது.
*  தலா 245 என்ற விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
*  155 லாபம் வைத்து 400க்கு ஒரு நிறுவனம் விற்பனை
*  தமிழகம் நேரடியாக 600க்கு வாங்கி உள்ளது.

இந்த கிட்களை பெற்ற ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள், சீன கிட்கள் தரமின்றி இருப்பதாகவும், அதன் பரிசோதனை முடிவுகள் 95% தவறாக இருப்பதாகவும் புகார் அளித்தன. இந்தநிலையில், சீன கிட்களை இறக்குமதி செய்த மேட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திற்கும், அதனுடன் ஒப்பந்தம் செய்திருந்த ஐசிஎம்ஆரின் அங்கீகாரம் பெற்ற விநியோக நிறுவனமான ரேர் மெடபாலிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சப்ளை விவகார மோதலால் அதிர்ச்சிகரமான ஊழல் வெளிப்பட்டுள்ளது. அதாவது, சீன டெஸ்ட் கிட்கள் 145 சதவீத லாபத்தில் அரசுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள உண்மை ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. மத்திய அரசின் தேவைக்காக, ஒரு கிட் ரூ.600க்கு (ஜிஎஸ்டி உட்பட ரூ.627) என்ற விலையில் 5 லட்சம் கிட்களை சப்ளை செய்ய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ரேர் மெடபாலிக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 27, 28ம் தேதியில் ஆர்டர் கொடுத்தது.

அந்நிறுவனம், சீனாவின் வோன்ட்போ நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கித் தர மேட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம், சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை தலா 225 என்ற விலைக்கு வாங்கி உள்ளது. இதன் விமான போக்குவரத்து செலவு ரூ.20 ஆகும். மொத்தம் ரூ.245 மட்டுமே. இதில் 155 லாபம் வைத்து மெடபாலிக்ஸ் நிறுவனத்திற்கு 400 விலைக்கு சப்ளை செய்துள்ளது. அதை மெடபாலிக்ஸ் நிறுவனம் ரூ.600 விலைக்கு ஐசிஎம்ஆருக்கு சப்ளை செய்துள்ளது. முதற்கட்டமாக 2.76 லட்சம் கிட்கள் சப்ளை செய்யப்பட்டன. இதேபோல, மேட்ரிக்ஸ் நிறுவனத்திடமிருந்து தமிழக அரசும் தனது விநியோக நிறுவனத்தின் மூலமாக 600 என்ற விலைக்கு 50,000 கிட்களை வாங்க நேரடியாக ஆர்டர் கொடுத்திருந்தது.

முதற்கட்டமாக 24,000 கிட்கள் வழங்கப்பட்டன. இந்த கிட்களை தமிழக அரசு அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாகவும் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் திமுக மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டியது. தற்போது இதில் மற்றொரு முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்களை தங்களைத் தவிர வேறு எந்த நிறுவனம் மூலமாகவும் சப்ளை செய்யக் கூடாது என மேட்ரிக்ஸ்ட-மெடபாலிக்ஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதை மீறி மேட்ரிக்ஸ் நிறுவனம், தமிழக அரசின் விநியோக நிறுவனத்திடம் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை விற்றுள்ளது. இது தொடர்பான வழக்குதான் டெல்லி நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த நாடே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் இருக்கும் நிலையில் அதிகப்படியான சோதனைகள் குறைந்த விலையில் செய்யப்பட வேண்டியது அவசியம். எனவே 245க்கு வாங்கிய டெஸ்ட் கிட்டை 600க்கு விற்பதை ஏற்க முடியாது. இந்த கிட்களை ஜிஎஸ்டி உட்பட 400 என்ற விலைக்கே விற்பனை செய்ய வேண்டும். ஏற்கனவே 2.76 லட்சம் கிட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2.24 லட்சம் கிட்களை உடனடியாக ஐசிஎம்ஆருக்கு சப்ளை செய்ய வேண்டும். இதேபோல தமிழக அரசுக்கும் மீதமுள்ள 26,000 கிட்களை வழங்க வேண்டும். தமிழக அரசு மட்டுமே 5 லட்சம் கிட்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மீதமுள்ள 4.5 லட்சம் கிட் மேற்கூறிய விலையில் வழங்கப்பட வேண்டும். இறக்குமதி செய்யும் விலை கருவி ஒன்றுக்கு 245 என்பதும் 400க்கு விற்றாலும் ஒரு கருவி மீது 155 லாபம் கிடைக்கிறது. மருத்துவ எமெர்ஜென்சி காலத்தில் இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்துக்கு இந்த லாபம் போதுமானது. இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பிலும் கூட சீன கிட்களை வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  குற்றம்சாட்டி உள்ளன.

பிரதமர் தலையிட ராகுல் வலியுறுத்தல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் பேரழிவுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சிலர் இதை வைத்து லாபம் சம்பாதிக்கின்றனர். அவர்களின் ஊழல் மனநிலையைப் பார்த்து வெறுப்படைகிறேன், வெட்கப்படுகிறேன். இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு லாப நோக்கத்தில் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது’’ என்றார். காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா பரிசோதனைக் கருவியை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ஒரு டெஸ்ட் கிட்டை 225க்கு இறக்குமதி செய்து 600க்கு விற்றுள்ளனர். லாபம் 375 இது மனிதாபிமானமற்றது, வெட்கக் கேடானது’’ என்றார்.

சீன கருவியை பயன்படுத்த வேண்டாம்
ஊழல் விவகாரம் பூதாகரமான நிலையில், சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஐசிஎம்ஆர் நேற்று கடிதம் அனுப்பி உள்ளது. அதில், ‘‘பிசிஆர் பரிசோதனை மூலமாக மட்டுமே கொரோனா உறுதிபடுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே சமயம், ரேபிட் டெஸ்ட் என்பது நோய் கண்காணிப்புக்காக மட்டுமே நடத்த வேண்டுமெனவும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஆனால், சீனாவின் வோன்டோ பயோடெக், ஜூஹாய் லிவ்ஜான் ஆகிய 2 நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவி தவறான முடிவை காண்பிப்பதாக சில மாநில அரசுகள் புகார் அளித்தன. ஆய்வு செய்ததில் அந்த கருவிகள் உறுதியளித்த தரத்தில் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது. எனவே மாநில அரசுகள் அந்நிறுவன கிட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், மேலும் கருவிகளை விநியோக நிறுவனத்திடமே திருப்பி தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad