Type Here to Get Search Results !

கடவுளுக்கே கொரோனா ஸ்தம்பித்தது மதுரை; பட்டருக்கு கொரோனா: மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றும் 100 பேருக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவிலில் பணியாற்றும் மற்ற பட்டர்கள், பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் அவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவரது குடும்பத்தினர், அவர் வசிக்கும் வீட்டின் அருகே வசிப்பவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அது தவிர அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் சீல் வைத்து அடைக்கப்பட்டன. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த பட்டர் கடந்த 12-ந் தேதி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து கோவிலில் பணியாற்றும் பட்டர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

உடனே அவர்கள் அனைவரும் கோவில் பகுதிக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். இதற்கிடையில் கோவில் முழுவதும் சுகாதார பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுமார் 60 பட்டர்கள், பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரையும் கோவிலுக்கு வெளியே கிழக்கு சித்திரை வீதியில் மருத்துவ பரிசோதனைக்காக வரிசையாக நிறுத்தினர். பின்னர் மருத்துவக்குழுவினர் ஒவ்வொருவராக பரிசோதனை செய்தனர். அவர்களது அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதனால் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுஒருபுறம் இருக்க நேற்று மாலையில் இருந்து இரவு வரை அனைத்து பூஜைகளும் கோவிலில் வழக்கம் போல் நடந்தன. இது குறித்து பட்டர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றுக்கு ஆளான மூதாட்டியின் மகனான பட்டரிடம் பாஸ்போர்ட்டு கிடையாது. அவர் வெளியூருக்கு கூட செல்லமாட்டார். கடந்த 12-ந் தேதி கோவிலுக்கு வந்த அவர், அதன்பின்னர் கோவிலுக்குள் வரவில்லை. மேலும் மற்ற பட்டர்களும் தினமும் கோவிலுக்குள் வருவதில்லை. பூஜை முறைகள் உள்ள பட்டர்கள் மட்டும் தான் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்கின்றனர். எங்களில் 3 பட்டர்கள் மட்டும் வெளிநாடு சென்று வந்துள்ளனர். அவர்களும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின்படி 21 நாட்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். சுகாதாரத்துறையினர் வந்து பரிசோதனை செய்த பின்னர்தான் வெளியே வந்தனர்.

பாதிக்கப்பட்டவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 25-ந் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஆகம விதிப்படியும் வருகிற 4-ந்தேதி திருக்கல்யாணம் மட்டும் நடத்தப்பட இருந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் திருக்கல்யாணம் குறித்து அரசு தான் முடிவு எடுக்கும். எது எப்படி இருந்தாலும் கோவிலில் செய்ய வேண்டிய அனைத்து பூஜைகளும் தினமும் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி எதிரொலி: சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிமைப்படுத்திக் கொண்டார்
வாணியம்பாடியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள போலீசாருக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேலைபார்த்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவர் சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தனது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் அவருக்கு மறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு சபாநாயகர் தெருவில் உள்ள தனது வீட்டில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிமைப்படுத்திக் கொண்டதால், அவருடன் பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட நண்பருடன் தாயம் விளையாடிய கொத்தனார் உள்பட 3 பேருக்கு கொரோனா
பாதிக்கப்பட்ட நண்பருடன் தாயம் விளையாடிய கொத்தனார் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் மொத்தம் 77 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், ஏற்கனவே 44 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதற்கிடையே நேற்று ஒரு சிறுமி, 5 பெண்கள் உள்பட மேலும் 11 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இவர்களில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் 5 பேரும், மாசிலாமணிபுரத்தில் 3 பேரும், அண்ணாமலையார் மில் மேடு பகுதியில் 2 பேரும், ஒட்டன்சத்திரத்தில் ஒருவரும் ஆவர். இதன்மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆனது.

அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பிளிக்கையை அடுத்த கொசவப்பட்டியில் ஆம்னி பஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் டிரைவரின் நண்பரான கொத்தனாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த போது டிரைவர், கொத்தனார் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து தாயம் விளையாடியுள்ளனர். அப்போது டிரைவரிடம் இருந்து கொத்தனாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்போன் கடைக்காரர் மற்றும் பெரியகலையம்புத்தூரை சேர்ந்த இலை வியாபாரி ஆகியோருக்கு அவர்களுடைய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன்மூலம் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

பெண்ணுக்கு கொரோனா தொற்று எதிரொலி: அரகண்டநல்லூரில் யாருக்காவது சளி, காய்ச்சல் இருக்கிறதா? மருத்துவக்குழுவினர் ஆய்வு
அரகண்டநல்லூரில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பொதுமக்களில் யாருக்காவது சளி, காய்ச்சல் இருக்கிறதா? என்று மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நேற்று முன்தினமே அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. அத்துடன் நகரில் நேற்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடவேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அதிரடி உத்தரவு போட்டார். அதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. அதோடு ஊரடங்கு முடியும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக நகரில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் நகரில் பேரூராட்சி துறையினரும், சுகாதாரத்துறையினரும் செயல் அலுவலர் விழிச்செல்வன் மேற்பார்வையில் தினமும் 3 வேளை கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்களிலும் 3 மருத்துவக்குழுக்கள் முகாமிட்டு வீடுதோறும் சென்று யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் இருக்கின்றதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில் அவசர தேவைக்கு ஏ.டி.எம். எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிகம் இன்றி வங்கிகள் செயல்பட்டன.

மேலும் அரகண்டநல்லூர் பேரூராட்சியை சுற்றியுள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து அரகண்டநல்லூருக்கு பொதுமக்கள் வந்து சென்றிருப்பதால் அந்த கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சாம்ராஜ், ஜானகி ஆகியோர் மேற்பார்வையில் அரகண்டநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் துாய்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி ஊரான அரகண்டநல்லூரையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைசி ஊரான திருக்கோவிலூரையும் இணைக்கும் மாவட்ட எல்லையான தென்பெண்ணையாற்று பாலத்தின் கரையில் போலீசார் தடுப்பு அமைத்து ‘சீல்’ வைத்து உள்ளனர். ஆனால் மளிகை, காய்கறி, பால் ஏற்றி வந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அங்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் முக்கிய வீதிகளில் காலை, மாலை இரு நேரமும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குழாய் மூலம் வீடு, வீடாகவும் சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர கேரளா மற்றும் பெங்களூரில் இருந்து வடபொன்பரப்பிக்கு வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு முக கவசம், கையுறை அணிவது மற்றும் அடிக்கடி கை கழுவுவதன் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை:கொரோனா அறிகுறியுடன் இருந்த போலீஸ்காரர் தப்பி ஓட்டம் காரில் சென்ற போது நாங்குநேரியில் சிக்கினார்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் இருந்த போலீஸ்காரர் தப்பி ஓடினார். காரில் சென்ற போது நாங்குநேரியில் சிக்கினார்.

போலீஸ்காரர்

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார். அவருக்கு குமரி மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று சேலத்தில் இருந்து அவர் தனது காரில் புறப்பட்டு நாகர்கோவில் வந்தார்.

உறவினர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படைக்கு பணியில் சேர வந்தார். வெளி மாவட்டத்தில் இருந்து அவர் வருவதால் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள மாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அவருடைய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகளான சளி, இருமல் போன்றவை இருந்ததால் அவரை அங்குள்ள தனிமைப்படுத்தும் வார்டில் தங்குமாறு டாக்டர்கள் கூறினர்.

நழுவினார்

ஆனால் அவர் நைசாக அங்கிருந்து நழுவி, தான் வந்த காரிலேயே உறவினர்களுடன் சேலம் நோக்கி புறப்பட்டார். இதையறிந்த டாக்டர்கள் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த போலீஸ்காரரை தேடி பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை.

தப்பி ஓட்டம்

அதன்பிறகு தான் அவர் தான் வந்த காரிலேயே தப்பிச் சென்றது தெரிய வந்தது. உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வாக்கி டாக்கி மூலம் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர். சோதனைச்சாவடிகளின் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால், அதற்குள் அந்த போலீஸ்காரரும், உறவினர்களும் காரில் குமரி மாவட்ட எல்லையை கடந்து நெல்லை மாவட்டத்துக்குள் சென்று விட்டனர்.

நெல்லை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில், குமரி மாவட்ட போலீசாரும் போலீஸ்காரர் சென்ற காரை துரத்திச் சென்றனர். நாங்குநேரி பகுதிக்கு சென்ற போது, அங்கு நெல்லை மாவட்ட போலீசார் உதவியுடன் குமரி மாவட்ட போலீசார் அந்த காரை மடக்கினர்.

பரபரப்பு

பின்னர் காரில் இருந்த 4 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி தனிமைப்படுத்தும் வார்டில் சேர்த்தனர். இதன் பிறகு போலீஸ்காரருடன் வந்த 3 பேருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியிலும், குமரியையொட்டி உள்ள நெல்லை மாவட்ட பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad