Type Here to Get Search Results !

அளவில்லா ஆரோக்கியம் தரும் செம்பு!






‘பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி’ என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் காரணம், பெரியவர்கள் சொல்வதன் பின்னால் நமக்குப் புரியாமல் ஆயிரம் விஷயங்கள் புதைந்திருக்கும் என்பதுதான். அந்த வகையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரங்களின் மகிமையை உணர்ந்தால் இன்னும் வியப்பின் உச்சத்துக்கே சென்றுவிடுவீர்கள். குறிப்பாக, செம்பு என்கிற உலோகம் எண்ணற்ற மருத்துவ பலன்களைக் கொண்டது. செம்புக்குள் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியங்கள் என்னவென்று நிபுணர்களிடம் பேசுவோம்...

‘‘செம்பு பல்வேறு மருத்துவரீதியான பலன்களைக் கொண்டது. வீட்டில் வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த முடியாதவர்கள் செம்பு பாத்திரத்தில் 16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும். Oligodynamic effect என்ற விளைவானது தண்ணீருக்குள் நேரடியாக செல்வதால் அது காப்பருடன் கலந்து இதுபோல் நீர் சுத்தப்படுகிறது. வலிப்புநோய் உள்ளவர்களுக்கு செம்பு பாத்திரத்தின் தண்ணீர் மிகவும் பயன்படக்கூடியது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கும் செம்பு பாத்திரத்தின் நீரானது கொழுப்பைக் கரைக்கப் பயன்படுகிறது.

இது முதுமையைத் தள்ளிப்போடுகிறது. அத்தோடு புற்றுநோயின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆர்த்தரைட்டிஸ் நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கும், தைராய்டுக்கும் தொடர்ந்து செம்பில் நீர் அருந்தும்போது நல்ல நிவாரணம் கிடைக்கிறது. சாதாரணமாக செம்பு பாத்திரம் அல்லது குடத்தில் நீர் நிரப்பப்பட்டு 8 முதல் 10 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பயன் நமக்கு கிடைக்கும். நீர் நிரப்பிய உடனேயே அந்த நீரை உபயோகிப்பதால் அதில் நமக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை.

இரவு பாத்திரத்தை நிரப்பி விட்டு 8 மணி நேரம் கழித்து காலையில் எழுந்து பருகுவதால் அதில் நிறைந்திருக்கும் மருத்துவ குணம் நமக்கு முழுவதும் கிடைக்கிறது. அதேபோல் மாலையும் அந்த நீரை அருந்தலாம். இது மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது’’ என்று செம்பின் மகத்துவங்கள் பற்றி விளக்குகிறார் உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன். செம்பில் அப்படி என்ன வேதியியல் ரீதியாக அடங்கி இருக்கிறது என்று வேதியியல் பேராசிரியர் ரவி சுந்தர பாரதியிடம் கேட்டோம்...‘‘பாத்திரங்களாக செய்வதற்கு ஏற்ற வகையில் எளிதாக வளைந்து கொடுக்கக்கூடிய உலோகம் செம்பு. இதனால் ஆதிகாலத்திலேயே செம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியா நாகரீகத்தில் செம்புப் பாத்திரங்களைத்தான் அதிகம் உபயோகப்படுத்தியுள்ளனர். காரணம் வெப்பத்தை விரைவிலேயே கிரகித்து சமைக்க எளிதானதால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. செம்பு பாத்திரத்தின் மூலம் உணவு உண்ணும்போதோ, தண்ணீர் அருந்தும்போதோ பலவிதமான பலன்கள் நமக்குக் கிடைக்கிறது. நோய்களை உருவாக்கக்கூடிய நச்சுத்தன்மை, கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து தூய்மையானதாக உணவையோ தண்ணீரையோ ஆரோக்கியமானதாக மாற்றித்தரும் ஆற்றல் கொண்டது செம்பு என்பதுதான் அதன் ரகசியம்.

அவற்றில் நிரப்பப்படும் நீரானது தானாகவே தூய்மைப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால்தான் கோயில்களில் தீர்த்தம் கொடுக்க செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதாலும், குளிப்பதாலும் உடல் சூடு தணியும். உளவியல்ரீதியாகவும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது செம்பு. சிலர் கைகளில் வளையமாகவும், மோதிரமாகவும் செம்பை அணிவதற்கு இதுவே காரணம். செம்பு உறுதித்தன்மை கொண்டது. எனவே, போருக்குத் தேவையான வாள்கள், முக, உடல், கை மற்றும் கால் கவசங்கள், போர்க்கருவிகள் போன்றவற்றிற்காகவும் செம்புகளை பயன்படுத்தியுள்ளனர்.

செம்பு கலந்த பித்தளை பொருட்களையும் உபயோகப்படுத்தியுள்ளனர். இதனால் வீரர்களின் உறுதித்தன்மை அதிகப்படுத்தப்பட்டது. இதனால் போர் புரிபவரின் உடல் சூடு குறைக்கப்படும் என்று நம்பப்பட்டது. எகிப்தில் மனிதன் இறந்தபின் சடலங்களை பெரிய மண் பாத்திரங்களில் போட்டு புதைத்துள்ளனர். அதுபோல் முற்காலத்தில் செம்பு பாத்திரங்களை செய்து அதில் சடலங்களை வைத்தும் புதைத்துள்ளனர் நம் முன்னோர்கள்’’ என்றவரிடம், செம்பு பாத்திரங்களுக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற சந்தேகத்தையும் கேட்டோம்...‘‘செம்பு, அலுமினியம் மற்றும் இரும்பு(Stainless steel) என பாத்திரங்கள் மூன்று வகையில் செய்யப்படுகிறது.

இவற்றில் இயற்கையிலேயே அதிக வெப்பத்தை கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக செம்பு பாத்திரங்கள் இருக்கின்றன. இதனால்தான் செம்பு பாத்திரங்கள் விரைவிலேயே சூடாகிவிடுகிறது. நாம் பயன்படுத்தும் ஸ்டெயின்ெலஸ் ஸ்டீல் பாத்திரங்களில் கூட அடிப்பகுதியானது செம்பில் செய்யப்படுவதற்குக் காரணமும் இதுதான். குக்கர் மற்றும் தோசைக்கல் போன்றவற்றின் அடிப்பகுதியில் செம்பு கலக்கப்பட்டிருப்பதையும் கவனித்திருப்போம். சாதாரண பாத்திரங்களை விட இது சமையலுக்குத் தேவையான வெப்பத்தை சீக்கிரமே பெறுவதால் இவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

செம்பு பாத்திரங்களை அனைத்து தட்பவெப்பநிலையிலும் உபயோகப்படுத்தலாம். ஆனால், செம்பு பாத்திரங்களில் கார, அமிலத் தன்மை கொண்ட மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களை அதில் வைத்து பயன்படுத்தக்கூடாது. புளிக்கும் தன்மை கொண்ட தயிர் மற்றும் பழச்சாறுகளை அந்த பாத்திரங்களில் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் சூடான பதார்த்தங்களையும் செம்பு பாத்திரங்களில் பயன்படுத்தக்கூடாது. பொருட்களில் உள்ள வெப்பம் அதிகமாக இருக்கும்போது செம்பில் உள்ள எலக்ட்ரான் மாற்றங்கள் விரைவாக நிகழும். இவ்வாறு நிகழக்கூடாது’’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad