தேர்வுக்குழு முடிவை மதிக்கிறேன்...
மும்பை: ஆஸ்திரேலிய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததில் வருத்தம் ஏதுமில்லை. தேர்வுக்குழுவினரின் முடிவை மதிக்கிறேன் என்று அஜிங்க்யா ரகானே கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ரகானே (29 வயது), தொடக்க வீரராக களமிறங்கி 5 இன்னிங்சில் மொத்தம் 244 ரன் (அதிகம் 70, சராசரி 48.80) விளாசினார். முதல் போட்டியில் 5 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்த 4 இன்னிங்சில் 55, 70, 53, 61 என தொடர்ச்சியாக அரை சதம் விளாசி அசத்தினார்.
நல்ல பார்மில் உள்ள ரகானே, டி20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது குறித்து ரகானே கூறியதாவது: தற்போதைய சூழலில் எல்லா வீரர்களுமே ஏராளமான போட்டிகளில் விளையாடி வருகிறோம். ஒவ்வொரு போட்டிக்குமான சூழ்நிலை மற்றும் வியூகத்துக்கு ஏற்ப அணி நிர்வாகமும், தேர்வுக் குழுவினரும் இணைந்து முடிவு எடுக்கின்றனர். அதை நாங்கள் மதிக்கிறோம். அணியில் இடம் பிடிப்பதற்கு கடுமையான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. இத்தகைய சவால் இருந்தால் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் அணிக்காக சிறந்த பங்களிப்பை தருவார்கள். ஆரோக்கியமான போட்டி இருப்பதை எப்போதுமே விரும்புவேன். தொடக்க வீரராக எனக்கு கொடுக்கப்பட்ட பணியை, பொறுப்பை நிறைவாக செய்தேன் என்ற மகிழ்ச்சி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைப் போலவே ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறந்த பார்மை வெளிப்படுத்தினேன். தொடர்ச்சியாக நான்கு அரை சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் அவற்றை சதங்களாக மாற்றியிருக்கலாம். அணிக்காக பங்களிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. ரோகித்துடன் இணைந்து மூன்று இன்னிங்சில் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தது, வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றியது. இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.