கமல்ஹாசனுக்கு போட்டியாக ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட தயங்குகிறாரா?



சென்னை,

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது. நட்சத்திர அந்தஸ்து ரஜினிகாந்துக்கு உதவும் என்பதும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சினிமா வெளிச்சமே கைகொடுத்தது என்பதும் பலரது கணிப்பாக இருக்கிறது.
ஜெயலலிதா மறைவினால் வெற்றிடமாக உள்ள அரசியலை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ரஜினிக்கு அ.தி.மு.க.வுக்கு எதிராக குரல் கொடுத்து தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டு வந்த அனுபவம் இருக்கிறது. அனைத்து கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக பழகி அரசியலை கற்றுக்கொண்டும் இருக்கிறார்.

எனவேதான் அவரது அரசியல் பிரவேசம் பல நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ரசிகர்களும் சுவரொட்டிகள் மூலம் அரசியலுக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில்தான் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்று அதிரடியாக பேசினார்.
நாட்டில் அமைப்பு கெட்டு கிடக்கிறது. ரசிகர்கள் போருக்கு தயாராக இருங்கள் என்றும் அறிவித்தார். காலா, 2.0 படங்களை முடித்து விட்டு அடுத்த மாதம் ரசிகர்களை மீண்டும் சந்திக்கும்போது அரசியலுக்கு வரும் முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அரசியல் கட்சி நடத்தும் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் அரசியலில் ஈடுபடுவது குறித்து கருத்து கேட்டதாகவும் அவர்களும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டு வரும் குழப்பங்களும் கருணாநிதி வயது முதிர்வால் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது தாராளமாக அரசியலில் ஈடுபடலாம் என்று யோசனை சொன்னதாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளில் ரஜினிகாந்த் ரகசியமாக ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியான நிலையில்தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து திருப்பத்தை ஏற்படுத்தினார். ரஜினிகாந்துக்கு முன்பாக அரசியலுக்கு வந்துவிடும் வேகம் அவரிடம் இருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குகளை இழுப்பது கடினமான வி‌ஷயம் என்று ரஜினிகாந்த் கருதுகிறார். 1996 தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் சொன்னதை ஏற்றுக்கொண்ட மக்கள் 1998 தேர்தலில் அவர் கேட்டுக்கொண்டபடி வாக்களிக்க மறுத்து விட்ட வரலாறும் இருக்கிறது.
இதனாலேயே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தயங்கி சிவாஜி கணேசனின் தோல்வியை உதாரணப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். தனது முடிவை அடுத்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வெளிப்படையாக அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url