‘ராக்கி’ கட்டி அண்ணனாக ஏற்பேன் சைதன்யாவுக்கு சமந்தா மிரட்டல்
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா காதல் ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் சைதன்யா காதலை மறைத்து வந்ததால் அவரை ராக்கி கட்டி அண்ணனாக ஏற்பதாக மிரட்டி சமந்தா சம்மதிக்க வைத்த ருசிகர தகவல் வெளியாகி உள்ளது. சைதன்யா, லாவண்யா திரிபாதி நடிக்கும் தெலுங்கு படம், ‘யுத்தம் சரணம்’. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் பேட்டி அளித்த சைதன்யா, தனக்கும் சமந்தாவுக்கும் இடையே நடந்த காதல் போராட்டம்பற்றி தகவல் வெளியிட்டார். அவர் கூறியது: சமந்தாவும் நானும் (சைதன்யா) ஏ மாயா சேவாவே படத்தில் நடித்தபோது காதலிக்க தொடங்கினோம். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக காதல் வளர்ந்தது. இருவரும் பல விஷயங்களை மனம்விட்டு பேசினோம். ஆனாலும் காதல் விவகாரத்தை எனது பெற்றோரிடம் சொல்லாமல் தாமதம் செய்து வந்தேன். பெற்றோரிடம் காதல்பற்றி கூறி சம்மதம் பெறுமாறு பலமுறை சமந்தா என்னிடம் கூறி வந்தார். அதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். திடீரென்று ஒருநாள் என்னை சந்தித்த சமந்தா சீக்கிரம் காதல்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லாவிட்டால் உன் கையில் ராக்கி கட்டி அண்ணனாக ஏற்றுக்கொள்வேன் என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. வேறு வழியில்லாமல் நாங்கள் காதலிக்கும் விஷயத்தை எனது பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெற்றேன். இவ்வாறு நாக சைதன்யா கூறினார்.