இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் நிமுச்சில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளவயது தம்பதியினர் தங்கள் மூன்று வயது குழந்தையை துறந்துவிட்டு சந்நியாசம் வாங்கப் போகிறார்கள். குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் அவர்கள் துறக்கவில்லை, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் விட்டுச்செல்கின்றனர்.
35 வயது சுமித் ராடெளர், நிமுச் நகரில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தனது 34 வயது மனைவி அனாமிகாவுடன் செப்டம்பர் 23 ஆம் தேதியன்று, துறவறம் பூணுவதற்கான தீக்ஷை வாங்க முடிவு செய்திருக்கிறார்.
தம்பதிகளின் குடும்ப நண்பர் விஜய் ஜெயின், "ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட குடும்பத்தை சேர்ந்த சுமித் தம்பதியர் தீக்ஷை வாங்க முடிவு செய்தார்கள். இந்த முடிவை துறக்கச் சொல்லி பிறர் சொன்ன எந்த அறிவுரைகளையும் அவர்கள் கேட்கவில்லை. இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கின்றனர். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக ஆன்மிகத்தில் ஆழ்ந்து போன அவர்கள் இறுதியில் குடும்ப வாழ்க்கையை துறந்து துறவு வாழ்க்கையில் ஈடுபட சந்நியாசம் வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்" என்கிறார்.
சந்நியாசம் மேற்கொள்ளும் முடிவை ஏற்றுக் கொள்ள்ளாத குடும்பத்தினர், தம்பதிகளின் மனதை மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவின. இறுதியில் வேறு வழியில்லாமல் குடும்பத்தினர் சம்மதிக்க வேண்டிதாயிற்று. சுமித் அனாமிகா தம்பதிகள் ஒன்றாக சந்நியாசம் வாங்கிக்கொண்டு துறவிகளாகப் போகிறார்கள்.
சூரத்தில் இருக்கும் சாதுமார்க் ஜெயின் ஆசார்ய ராம்லால் மஹராஜிடம் தீக்ஷை வாங்கவிருக்கும் இந்த தம்பதிகள், தற்போது மெளன விரதத்தை தொடங்கிவிட்டனர். தம்பதிகளின் துறவறம் பற்றி பெற்றோர் உட்பட குடும்பத்தினர் யாரும் பேச மறுத்து, மெளனமாகவே இருக்கிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இல்லற வாழ்வைத் தொடங்கிய சுமித்-அனாமிகா தம்பதிகள், தங்களது மூன்று வயது குழந்தை இப்யாவை குடும்பத்தினரின் பராமரிப்பில் விட்டு விட்டு துறவற வாழ்க்கையை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அனாமிகாவின் தந்தை அஷோக் சந்தோலியா, சித்தோட்கரின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தவர்.
சுமித்தின் ஒன்றுவிட்ட சகோதரர் சந்தீப் சொல்கிறார், "லண்டனில் இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு அங்கேயே பணிபுரிந்த சுமித்தை குடும்பத் தொழிலை பார்த்துக் கொள்வதற்காக இங்கு வரவழைத்தார்கள்".
பொறியியல் பட்டதாரியான அனாமிகா ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெடில் பணிபுரிந்தவர்.
நிமுச்சில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சப்னா மோஹ்ரா, "இதுபோன்ற கடினமான முடிவை எடுப்பது சுலபமானது இல்லை. உலக மாயையில் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். வயதான பிறகு கூட குடும்பத்தை, மனைவியை, சொந்த பந்தங்களை, சொத்தை விட்டுப் பிரிய மனம் வராத காலத்தில், இளம் வயதிலேயே தம்பதி சமேதராக, சந்நியாசம் பூண இருவரும் ஒத்த முடிவெடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்று. மிகவும் போற்றுதலுக்கு உரியது" என்கிறார்.
நிமுச்சில் 1.25 லட்சம் சதுர அடி கொண்ட மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்கு சொந்தக்காரர்களான ராடெளர் தம்பதிகள், ஓர் அடி நிலம்கூட வேண்டாம், பெற்ற குழந்தையும் வேண்டாம் என துறவு பூணுகின்றனர்.
ராடெளர் குடும்பத்தினர் பலவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர், சிமெண்ட் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, வர்த்தகம், நிதித்துறை, விவசாயத்துறை என அவர்களின் தொழில் சாம்ராஜ்ஜியம் பரந்துவிரிந்துள்ளது. ஆனால் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளே சில நாட்களில் துறவிகள்!
Post a Comment
0 Comments