மிரட்டப் போறான் தமிழன்! மெர்சல் அப்டேட்ஸ்




விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் திரைக்கு வந்து 25ஆம் ஆண்டில் வெளிவரும் படம், தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது படம், சன் தொலைக்காட்சி பிரம்மாண்டமாக இசை வெளியீட்டை நேரலை செய்த படம் ஆகிய பெருமைகளோடு ரசிகர்களை மிரட்ட தயாராகிவிட்டது மெர்சல். ஐரோப்பாவில் படமாக்கப்பட்ட பாடல்காட்சிகள் தவிர்த்து முழுப்படமும்  கலை  இயக்குநர் முத்துராஜ் அமைத்த செட்டுகளிலேயே உருவாகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் மேஜிக் செட், குழந்தை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். விஜய் இந்தப்படத்தில் மூன்றுவித தோற்றங்களில் நடித்துள்ளார். மூன்று கால கட்டங்களில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள்.

பல்லாவரத்து இளம்பெண்ணாக சமந்தா கலக்கியிருப்பதாக சொல்கிறார் இயக்குநர் அட்லி. கொளுத்தும் வெயிலில் மூவாயிரம் துணை நடிகர்களுடன் ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சி, படத்தின் தலைப்புக்கு ஏற்ப மிரட்டலாக இருக்குமாம். பாகுபலியின்  கதாசிரியர் கே.வி. விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அப்பா) கதை எழுதிக்கொடுத்ததுடன் திரைக்கதை அமைப்பிலும் உதவியிருக்கிறார். ரமணகிரி வாசன் வசனத்தில் அங்கங்கே பன்ச் இடம்பெற்றிருப்பது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறது படக்குழு. எழுபதுகளின் காலகட்டத்தில் விஜய் பாடுவதாக அமைந்த ஆளப்போறான் தமிழன்...

பாடல் பேச்சுத்தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள நீதானே... பாடல் கவிதைத் தமிழில் அமைந்திருக்கிறது. அல்லு சில்லு ... பாடல் சென்னைத் தமிழில் புனையப்பட்டுள்ளது. மேச்சா மேட்ச் ஆச்சா... பாடலில் அதிகமாக ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துப் பாடல்களையும் கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் பதினைந்து இடங்களில் பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார் அனல் அரசு. விஜய்யின் ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான மூவ்மென்டுடன் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

அட்லியின் முந்தைய இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர், அவரது நண்பர் ஜார்ஜ் வேறொரு பணியில் இருப்பதால் ஜார்ஜ், இந்தப் படத்தில் இணைய முடியவில்லை. அட்லியிடம்  உதவி இயக்குநராக இருந்த விஷ்ணு, ஒளிப்பதிவு கற்றுக்கொள்ள விரும்பினார். அவரை ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு நாதனிடம் சேர்த்துவிட்டிருக்கிறார் அட்லி. ஒளிப்பதிவைக் கற்று முடித்து இந்தப் படத்துக்கு உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்த விஷ்ணுவை ஒளிப்பதிவாளர் ஆக்கியிருக்கிறார் அட்லி. துப்பாக்கின்னா தோட்டா இருக்கும், கத்தின்னா ஷார்ப் இருக்கும், தெறின்னா தெனாவட்டு இருக்கும், மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கும் என்கிறார் மெர்சல் நாயகன் விஜய்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url