ஆரஞ்சு மருத்துவக் குணங்கள்..........
மருத்துவக் குணங்கள்:
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.
ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.
ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.
இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.
இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.