உயரம் குறைந்தவர்களை உதாசீனப்படுத்துவது ஏன்?
"தற்போது விஜய் நடிக்கும் மெர்சல் படத்தில் நடிக்கிறேன்"
உற்சாகத்தை அடக்க முடியாமல் நம்முடன் பகிர்ந்து கொண்டார் 29 வயதான தயா.
அவருக்கு கை குலுக்கி வாழ்த்துச் சொன்னபோது பெருமிதத்தோடு பார்த்தார்.
ஆனால், அத்தனை உற்சாகத்தின் பின்னணியிலும் அவரது மனம் முழுவதும் வலியும், விரக்தியும் பரவியிருந்தது.
காரணம், எதிர்பார்த்த சினிமா வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதாலா?
இல்லை. இந்த சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து வாழ முடியவில்லை என்ற துயரம்தான் அதற்குக் காரணம்.
தாங்கள் உயரம் குறைந்தவர்கள் என்பதால் இந்த சமூகம் ஒவ்வொரு நகர்விலும் தங்களை ஒதுக்கியே வைப்பதாக அவர்கள் வேதனைப்படுகிறார்கள்.
சென்னை நகரில், வளர்ச்சி தடைபட்டு, உயரம் குறைவாக உள்ளவர்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்க நாம் அவர்களைச் சந்தித்தபோது, அவர்களது கதை மனதை நெகிழ வைத்தது.
எட்டாத உயரத்தில் காதல்
காதல் அனுபவங்கள் எட்டு. ஆனால், எந்தக் காதலுமே வாழ்க்கைக்கு எட்டாமல் போய்விட்டது என்று தனிமையில் வாடும் பொன்னுசாமி வேதனையுடன் தனது வலியைப் பகிர்ந்து கொண்டார்.
"இளம் வயதில், துடிப்புடன் இருந்த காலத்தில் எட்டு பெண்கள் என் வாழ்க்கையில் குறுக்கிட்டார்கள். ஆனால், என் உயரம் நான்கடி என்பதால் என் வாழ்க்கையில் இணைவதற்குப் பதிலாக, என்னைக் கடந்து போய்விட்டார்கள் எட்டு பேருமே. எனக்கு மிஞ்சியது வலியும் வேதனையும்தான்".
தற்போது 52 வயதை எட்டிய பொன்னுசாமிக்கு துணை, அவரைப் போன்ற குறைவான உயரம் கொண்டவர்கள்தான். குடும்பம், சொந்தம் என எல்லோருமே ஒதுங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்.
தினமும் சாதி ஒடுக்குமுறை போன்ற வன்மத்தைச் சந்திப்பதாக கூறுகிறார் பாபு (32).
''பொது இடங்களில் அணுகல் இல்லை, சாலையை கடக்க, பேருந்து, ரெயில் நிலையங்களில் செல்ல அச்சமாக உள்ளது. எங்களின் சிரமங்களை பார்த்து எங்களுக்கு உதவப் பலருக்கும் தோன்றுவதில்லை. வினோதமாக பார்ப்பவர்கள் எங்களின் ஒரு நாள் வாழக்கை எப்படி நடத்துகிறோம் என்று யோசித்தால், எங்களை கணிவாக நடத்துவார்கள்,'' என்கிறார் பாபு.
கஷ்டத்தையும் சுமக்க வேண்டிய கர்ப்ப காலம்
தனது கர்ப்ப காலத்தில் குழந்தையை தாங்கும் அளவுக்கு உடல் பலம் இல்லாததால், படுக்கையில் நெடுநாட்கள் இருந்ததை நினைவு கூர்ந்தார் வேணி.
''40 வயதில் குழந்தையை பெற்றெடுத்தேன். என் குழந்தைகளை நான் தூக்கி கொஞ்சுவது சிரமம். வெளியிடங்களுக்கு சென்றால் குழந்தையை தூக்கிக் கொண்டு நான் நடக்கமுடியாது,'' என்கிறார் வேணி.
தனது மகனும், மகளும் சராசரி உயரம் கொண்டவர்களாக வளருவார்கள் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் ஒன்றாகக் கலந்து வாழ்க்கையை ஓட்டுகிறார் வேணி.
இளமைப் பருவத்தில் ஏணி அல்லது நாற்காலி மீது ஏறி தேவையான வேலைகளை செய்துகொள்ளும் வளர்ச்சி குறைந்தவர்கள், முதுமையின்போது படும் துயரங்கள் சொல்லில் அடங்காது என்கிறார் 60 வயது ராமசாமி.
''சமூகத்தின் பார்வையில் குறைபாடு''
குறைபாடு கொண்ட சமூகத்தின் பார்வையால் தண்டிக்கப்படுவதாக உணரும் ஆபென் அரசாங்கத்தின் பார்வையும் தூரத்துப் பார்வையாக உள்ளது என்கிறார்.
உயரம் குறைந்தவர்களை உதாசீனப்படுத்துவது ஏன்?
''உயரம் குறைந்தவர்களுக்கு அரசின் உதவி பணம் கிடைக்கும் என்பது எனக்கு 32 வயதில்தான் தெரியவந்தது. ஜூலை மாதம் முதல் முறையாக அரசின் உதவி என்னை வந்துசேர்ந்துள்ளது, '' என்கிறார்.
அரசுக்கும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இடையில் ஏன் இந்த இடைவெளி?
அரசின் கவனம் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பில் உயரம் குறைந்தவர்கள் எத்தனை நபர்கள் உள்ளனர் என்ற விவரம் வேண்டும். ஆனால் அதுபோல ஒரு கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை என்கிறார் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன்.
''அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் குழப்பம் நிலவுகிறது. உயரம் குறைந்தவர்களுக்கு வாடகை வீடு கூட கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும் அரசின் வீட்டுவசதி திட்டத்தில் வீடு கிடைத்த உயரம் குறைந்தவர்கள் 100 நபர்கள் இருந்தால் பெரிய சாதனை,'' என்கிறார்
யார் தருவார் அங்கீகாரம்?
சென்னை நகரத்தில் வசிக்கும் சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்துள்ள சிவா உயரம் குறைந்தவர்கள் பெரும்பாலும் தனி மனிதர்களாவே இருக்கிறார்கள் என்கிறார்.
உயரம் குறைந்தவர்களுக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்திவரும் சிவா, 'திறமை இருந்தாலும், இவர்களுக்கு வேலை கொடுக்க யாரும் முன்வருவதில்லை. மேற்படிப்பு, வேலை இல்லாததால், பல குடும்பங்களில் நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம். ஒரே விதமான கதை, அதன் வரிசை மாறலாம் ஆனால் முடிவு தனிமை,'' என்கிறார்.
உயரம் குறைவாக இருப்பதால் மளிகை மற்றும் டீ கடைகளில் உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்க முடியாது . கணமாக பொருட்களை தூக்க முடியாது. சிறிய பாதங்களை கொண்டு மிக மெதுவாக நடப்பது போன்றவற்றை குறையாக எண்ணி எங்கும் வேலை கொடுக்கப்படுவதில்லை என்கிறார் சிவா.
இந்த சூழலில் திரைப்படத் துறை பிராதான வேலைவாய்ப்பு கொடுக்கும் இடமாக உள்ளது.
ஆனால் திரைப்படங்களில் நகைப்புக்குரியவர்களாகவே காட்டப்படுவதாக கூறுகிறார்கள் உயரம் குறைந்தவர்கள்.
அரசாங்கத்தின் பதில் என்ன?
வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களின் கணக்கெடுப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசின் உதவிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணைய அதிகாரிகளிடம் பேசியபோது இதுவரை தனிப்பட்ட கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை என்று தெரிவித்தனர்.
''வளர்ச்சி குறைந்தவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு இதுவரை எடுக்கப்படவில்லை. கை மற்றும் கால் இழந்தவர்கள், தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களோடு உயரம் குறைந்தவர்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அரசு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் உள்ள உயரம் குறைந்தவர்களில் பற்றிய விவரமும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
''அரசின் உதவிதிட்டங்கள் மூலம் பல உயரம் குறைந்தவர்கள் பயனடைய வாய்ப்புள்ளது. ஆனால் இவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு எதுவும் செய்யப்படவில்லை. இனி நாங்கள் அடுத்தடுத்த திட்டங்களில் உயரம் குறைந்தவர்களுக்கு சிறப்பு கவனிப்பு அளிப்போம்,'' என்றார்.
மூன்று அடி மட்டுமே இருந்தாலும், நாம் முதலில் சந்தித்த தயாவைப் போன்றவர்களின் லட்சியங்கள், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன. ஆனால், ஆட்சியாளர்களும், இந்த சமூகமும் இவர்களிடம் உயர்ந்த எண்ணங்களோடு நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆர்வலர்கள்.