Type Here to Get Search Results !

அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள்



அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களை (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தை குறைக்கலாம். அல்சர் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்போதே தடுக்கலாம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துவைத்திருக்க வேண்டும். உணவு பழக்கத்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்னையில் இருந்து எளிதாக விடுபடலாம். உணவுகளில் கவனமாக இருந்தால், செரிமானமின்மை, வாயுத்தொல்லை, வாந்தி எடுத்தல், உணவை பார்த்தாலே அருவருப்பாக உணர்தல் ஆகியவை தவிர்க்கப்படும். வயிற்றில் ஏற்படும் கடுமையான எரிச்சல் உணர்வையும் இதனால் தடுத்துவிடலாம். அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு வகைகள் இதோ...

ஆல்கஹால்: 



தொடர்ந்து மது பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய்களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பி பார்க்கவே கூடாது. குடிப்பழக்கத்தால் நம் வயிற்றில் அமிலம் மென்மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

காரமான உணவுகள்: 

அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிகம் மிளகாய் தூள், மிளகாய் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

காபி: 

‘தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம். காபிக்கு பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்று புண் ஆறவும் வாய்ப்புள்ளது.

குளிர்பானங்கள்: 



காபிக்கு பதிலாக விதவிதமான குளிர்பானம் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது, செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பால்: 



அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரத சத்தும் கொழுப்பு சத்தும் வயிற்று புண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமில தன்மையை அதிகரிக்க செய்யும்.

சிவப்பு இறைச்சி: 

இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களை பழுதடைய செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரத சத்தும், கொழுப்பு சத்தும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும், வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்க செய்யும்.

சாப்பிட வேண்டியது: 

முதலில், அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்கு சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம். உணவில் புதினாவை சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய் பால், மணத்தக்காளி கீரை ஆகியவை வயிற்று புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளை தவிர்த்தால், விரைவில் அல்சர் பிரச்னையில் இருந்து மீளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad