Type Here to Get Search Results !

720 மணி நேரம் ஓடும் உலகின் மிக நீளமான திரைப்படம்






ஸ்வீடனைச் சேர்ந்த 47 வயது திரைப்பட இயக்குநர் ஆண்டர்ஸ் வெபெர்க், உலகின் மிக நீளமான திரைப்படத்தை எடுத்து வருகிறார். இது ஒரு பரிசோதனை முயற்சிக்கான திரைப்படம். Ambience என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் 720 மணி நேரம் ஓடக்கூடியது! தொடர்ந்து 30 நாட்கள் ஒளிபரப்பினால்தான் முழுமையாகத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்க முடியும்! இருபதாண்டுகளாகத் திரைப்படத் துறையில் இயங்கி வரும் ஆண்டர்ஸ், 2020-ம் ஆண்டில் இந்தத் திரைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய திரை வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருக்கிறார்.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் திரைப்படத்தை வெளியிட்டு, ஒரே ஒரு காட்சி மட்டுமே காட்டப் போகிறார். பிறகு இந்தத் திரைப்படத்தின் நகல்களை அழித்துவிடுவார். ஏனென்றால் இந்தத் திரைப்படத்தை இன்னொரு முறை யாரும் பார்க்கக்கூடாது என்கிறார். 30 நாட்களும் இருக்கையில் உட்கார வைப்பதற்கு, இது தன்னுடைய ஆகச் சிறந்த படைப்பு என்று ஆண்டர்ஸ் பொய் கூறவில்லை. “நான் உலகின் மிக நீளமான திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று மட்டுமே திட்டமிட்டேன். இது வணிக ரீதியில் வெற்றி பெற்று சம்பாதித்துக் கொடுக்குமா என்றெல்லாம் நினைக்கவில்லை.

இவ்வளவு நீளமான திரைப்படத்தில் சில காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் நிலைத்திருந்தால்கூட அதை என் வெற்றியாகக் கருதுகிறேன்” என்று சொல்லும் ஆண்டர்ஸ், வாரம் ஒருமுறை 8 மணி நேரம் படம் பிடித்த காட்சிகளை 1 மணி நேரத்தில் எடிட் செய்து முடித்துவிடுகிறார்.

2011-ம் ஆண்டு வெளியான Modern Times Forever என்ற திரைப்படம் 240 மணி நேரம் ஓடக்கூடியது. இதுவே உலகின் மிக நீளமான திரைப்படமாக இருந்து வருகிறது. இதுவரை 400 மணி நேரப் படத்தை எடுத்து முடித்துவிட்டார் ஆண்டர்ஸ். திட்டமிட்டபடியே 2020-ம் ஆண்டு திரைப்படத்தை வெளியிட்டு விடுவார். 2014-ம் ஆண்டு 7 நிமிடங்களுக்கு முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டார். 2016-ம் ஆண்டு 7 மணி நேரத்துக்கு முன்னோட்டத்தை வெளியிட்டார். 2018-ம் ஆண்டு 72 மணி நேரத்துக்கு இறுதி முன்னோட்டக் காட்சிகளை வெளியிட இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் 100 நடிகர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு வசனங்கள் பேச வேண்டிய சிரமம் இல்லை. ஏனென்றால் இதுவரை எடுக்கப்பட்ட 400 மணி நேரத் திரைப்படத்தில் வசனங்களே இடம் பெறவில்லை. இனியும் அப்படியே எடுத்து முடித்துவிடும் யோசனையில் இருக்கிறார். “பார்வையாளர்களுக்கு விஷயத்தைக் கடத்த வசனம் அவசியமில்லை. காட்சிகள் மூலமும் இசை மூலமும் கடத்திவிட முடியும். இந்தத் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்து வருகிறேன்.

அடுத்தவர்களின் பணத்தில் திரைப்படம் எடுத்தால் நம்மால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் உலகின் மிக நீளமான திரைப்படத்தை, ஒருவராலும் முழுமையாகப் பார்க்க முடியாது என்பது உண்மைதான், ஆனால் இந்தத் திரைப்படத்தைப் பலரால் பார்த்து முடித்துவிட முடியும்” என்கிறார் ஆண்டர்ஸ்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பார்த்தாலே இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்க 2 வருடங்கள் ஆகும் போலிருக்கே!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad