‘‘எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்’’ நடிகை காஜல் அகர்வால்





ஐதராபாத்,

நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

‘‘நான் சினிமாவில் அறிமுகமானபோது ஒன்றிரண்டு படங்களில் நடித்து திரையில் தலைகாட்டினால் போதும் என்று இருந்தேன். அதிகமான படங்களில் நடித்து அதிக நாட்கள் சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது இல்லை. ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் 11 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறேன். இதுவரை 50 படங்களில் நடித்து விட்டேன். இதற்கு முக்கிய காரணம் எனது உழைப்பு. கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
நான் மதிக்கிற கதாநாயகன் மகேஷ்பாபு. அவரது அழகுக்கு நான் ரசிகை. நடிகர் பவன் கல்யாணும் எனக்கு பிடித்த நடிகர். கார்த்தியுடன் சினிமாவிலும் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கிறேன். அப்போது எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டு நண்பர்களானோம். சினிமாவில் திருமணமான பிறகும் கதாநாயகர்களுக்கு மார்க்கெட் உள்ளது. குழந்தைகள் பிறந்து வயது கூடிய பிறகும் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகிகள் நிலைமை அப்படி இல்லை. திருமணமானதுமே ஒதுக்கி விடுகிறார்கள். எனக்கு எப்போதும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. கதாபாத்திரங்கள் பிடித்து இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புதல் அளித்து அதில் எனது முழு உழைப்பையும் கொடுக்கிறேன்.
ஆரம்ப கால சினிமா வாழ்க்கை என்னை அதிகமாக கஷ்டப்படுத்தியது. கிசுகிசுக்களால் மனம் நொந்து இருந்தேன். அதன்பிறகு அதை கண்டுகொள்வது இல்லை.

எனது வாழ்க்கையில் மிக சிறந்த மனிதர் இவர்தான் என்று ஒருவரை பார்த்ததும் எப்போது எனக்கு தோன்றுகிறதோ அப்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன்.
எனக்கு கணவராக வரப்போகிறவர் எந்த துறையில் பணியாற்றினாலும் அந்த துறையில் திறமையானவராக இருக்க வேண்டும். அழகு வி‌ஷயத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் 6 அடி உயரத்துக்கு குறைவாக இருக்கக்கூடாது’’.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url