சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை போலீசார் அமைப்பு
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சில் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். காலை 5.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், பல்வேறு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. நகரின் மையப்பகுதியான தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் சமீபகாலமாகவே ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நிம்மதியாக வெளியில் நடமாட முடியாமல் தவித்து வருகிறார்கள். போலீசார்களே சில நேரங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது காவல்நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிமட்டத்தின் நிலையில் உள்ள காவலர்களும், தங்கள் உயிருக்கும், பணிபாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கருதுகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார். மேலும் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். பெட்ரோல் கு்ணடு வீசிய மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.