ரூ.350 கோடி சொத்து: ஜெயலலிதா உதவியாளரிடம் வருமான வரித்துறை விசாரணை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திக்க செல்பவர்கள் பூங்குன்றனை தான் முதலில் சந்திக்க முடியும். அதன் பின்னரே ஜெயலலிதாவை பார்க்க முடியும். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக பூங்குன்றன் திகழ்ந்தார்.
இந்த நிலையில் பூங்குன்றனை டெல்லிக்கு வரவழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ.350 கோடி சொத்து குவிப்பு தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பல நிறுவனங்களில் பூங்குன்றன் இயக்குநராகவும் இருந்து வருகிறார். சொத்துகள் அனைத்தும் பூங்குன்றனுக்கு சொந்தமானதா? ஜெயலலிதாவுக்கு உரியதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சசிகலா குடும்பத்துக்காக இந்த சொத்துகள் பினாமியாக எழுதி வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.