Type Here to Get Search Results !

ஹெல்த் ஸ்பெஷல் : இஞ்சி தரும் நன்மைகள்...!




சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் மூலிகைகளில் ஒன்று, இஞ்சி. இந்தியா, சீனா, கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளில் இஞ்சி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், அதன் பலன் நம்மை காக்கும். இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளவிடமுடியாதவை. அதன் சிறப்பை உணர்ந்தே நம் முன்னோர் இஞ்சியை நம் உணவில் அதிகம் சேர்த்து வந்தனர். இஞ்சியின் பிரமாத பலன்கள் இதோ...

ரத்த ஓட்டம் சீராகும்!

இஞ்சியை நாம் தினமும் எடுத்துக்கொள்வதால் ரத்த அணுக்கள் உறைந்து கட்டியாவது தடுக்கப்படுகிறது. இதனால், நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்தக் குழாய்களில் எந்தவிதத் தடையுமின்றி ரத்தம் சீராகச் செல்கிறது. அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, ரத்த அழுத்தம் குறைகிறது. மருத்துவ சோதனைகளின் வாயிலாகவும் இஞ்சியால் ரத்த அழுத்தம் குறைகிறது என நிருபிக்கப்பட்டுள்ளது. இஞ்சியை எடுத்துக்கொள்வதன் மூலம் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இஞ்சியை ஆண்மைக்குறைவு சிகிச்சையில் வெகுகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இரவில் அளவான உணவை உட்கொண்டவுடன் இஞ்சி தேநீர் பருகுவதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

ஜீரணத்தை சீராக்கும்!

செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. செரிமானம் சீராகி உட்கொள்ளும் உணவுகளில் இருந்து தேவையான சத்துகள் கிடைக்க வழிசெய்யும். சாப்பிட்ட உணவு உடனுக்குடன் செரிமானம் ஆவதால் வாயுத்தொல்லைகளில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.

ஒற்றை தலைவலிக்கு தீர்வு!

இஞ்சி எடுத்துகொள்வதால் ஒற்றை தலைவலியில் இருந்து தீர்வு கிடைக்கிறது. இஞ்சியின் தனித்துவமான ஆற்றல், ரத்த நாளங்களில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலோ அவற்றின் வலியை நீக்கி, வீக்கத்தைக் குறைக்கிறது.

புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும்!

இஞ்சி உடலில் புற்றுநோய் பரவுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது. இது புற்றுநோய் அணுக்களால் ஏற்படும் திசுக்களின் சேதங்களை தடுக்கிறது. தொடர்ந்து இஞ்சி சேர்க்கப்பட்ட உணவை உண்பதால், புற்றுநோய் உயிரணுக்கள் உடலில் பரவுவதை தடுக்க முடிகிறது. மேலும், இஞ்சி ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

மூட்டு வலிக்கும் பயன்படுத்தலாம்!

வலி நிவாரண தன்மையும், அழற்சி நீக்கும் தன்மையும் பெற்றுள்ளது. மூட்டு வலிக்கும் தசை பிடிப்புக்கும் நல்லதொரு தீர்வாக அமைகிறது. குளிக்கும்போது, இஞ்சியை சாறாக பிழிந்து எண்ணெயுடன் சேர்த்து வலியுள்ள இடங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, குளித்தால், தசைப்பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். வலி உள்ள இடத்தில் இதை உபயோகிக்கும்போது, வலியை குறைப்பதுடன், வீக்கத்தை தடுக்கிறது.

குமட்டல் வாந்தி வராமல் இருக்க!

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போதும், பெண்கள் கர்ப்பிணியாய் இருக்கும்போதும், வாந்தி குமட்டல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுதலை!

ஜலதோஷம், சளித்தொல்லை மற்றும் தொண்டைக்கட்டு போன்றவற்றுக்கு, இஞ்சி டீ சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சைக்கும் இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி, சிறுநீரில் அதிகபடியாக வெளியேறும் புரதத்தை கட்டுப்படுத்தி, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

கல்லீரல் பாதிப்பை தடுக்கும்!

வலி நிவாரணிகள் மற்றும் உடல் வெப்பத்தை குறைக்க, நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருட்கள், கல்லீரலை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறு, கல்லீரல் சேதமடையாமல் காக்கும் காப்பு கவசமாக இஞ்சி திகழ்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad